சானியா நிச்சயதார்த்தம் ரத்து!
புதுடில்லி: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா (23), தனது திருமண நிச்சயதார்த்தத்தை திடீரென ரத்து செய்துள்ளார். முகமது சோஹ்ராப் மிர்சாவுடன் (24) இணக்கமாக வாழ முடியாது என கருதியதால், இம்முடிவை மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜூலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. அப்போது சோஹ்ராப் பரிசாக அளித்த தங்கம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பாரம்பரிய உடையை சானியா அணிந்திருந்தார். இவர்களது திருமணம் இன்னும் 2 ஆண்டுகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதுவரை டென்னிஸ் போட்டிகளில் சானியா பங்கேற்பார். லண்டனில் தனது எம்.பி.ஏ., படிப்பை, சோஹ்ராப் தொடர்வார் என கூறப்பட்டது.
கருத்து வேறுபாடு: இதற்கு பின் சானியா பங்கேற்கும் போட்டிகளின் போது சோஹ்ராப்பை காண முடிந்தது. இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தான் திருமணத்துக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக சானியா கூறியுள்ளார். ""ஒரு ஆண்டில் 35 வாரங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, டென்னிஸ் விளையாடுவது என்றால், எதற்காக திருமணம் முடிக்க வேண்டும். எனவே, ஓய்வு பெறுவது தான் சிறந்தது. எனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு,'' என்றார்.
இணக்கம் இல்லை: இந்த பேட்டி இருவருக்கும் இடையே நல்லுறவு இல்லை என்பதை சுட்டிக்காட்டியது. டென்னிஸ் போட்டிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு செல்லும் சானியாவுடன் சோஹ்ராப் இணைந்து வாழ்வது கடினம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக மனக் குழப்பத்தில் இருந்த சானியா, சமீபத்திய ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சொதப்பினார். நேற்று திடீரென தனது திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். நிச்சயதார்த்தம் முடிந்த 6 மாதத்துக்கு பின், இம்முடிவை எடுத்ததற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிடவில்லை. இது குறித்து சானியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,""கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் நண்பர்களாக இருந்தோம். திருமண நிச்சயதார்த்தம் செய்தவர்கள் என்ற அடிப்படையில், இணக்கமாக வாழ முடியாது என்பதை உணர்ந்தோம். இனி சோஹ்ராப் வாழ்க்கை சிறப்பாக அமைய, எனது வாழ்த்துக்கள்,''என குறிப்பிட்டுள்ளார்.
நட்பு பாதிக்காது: சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில்,""இரு குடும்பங்களும் 50 ஆண்டுகளுக்கு மேலாக பழகி வருகிறோம். நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டாலும், எங்களது நட்பு தொடரும்,''என்றார்.
சோஹ்ராப் குடும்பம், ஈரானில் இருந்து குடிபெயர்ந்து பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் "செட்டில்' ஆனது. இங்கு "பேக்கரி' தொழில் நடத்தி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலை குறித்து சோஹ்ராப் தந்தை, அடில் மிர்சா கூறுகையில்,""டென்னிஸ் போட்டிகளில் சானியா பங்கேற்பது பிரச்னைக்கு காரணமல்ல. இருவரின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு நிச்சயதார்த்தத்தை ரத்து செய்ய ஒருமனதாக ஒப்புக் கொண்டோம். இரு குடும்பங்களின் நல்லுறவு தொடரும்,'' என்றார்.
நிச்சயதார்த்தம் ரத்தான நிலையில், டென்னிஸ் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த சானியா முடிவு செய்துள்ளார். பெடரேஷன் கோப்பைக்கான ஆசிய ஓசியானியா பிரிவு -2 தொடரில் பங்கேற்க இன்று கோலாலம்பூர் புறப்படுகிறார்.
--------
போராட வேண்டும்
நிச்சயதார்த்தம் ரத்தானது, சானியாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது குறித்து அவரது தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில்,""இருவரும் ஒத்துப் போகவில்லை என்பதை அறிவேன். அது தொடர்பான விபரங்கள் எனக்கு தெரியாது. இரு குடும்பங்களுக்கும் இடையே நெருக்கம் அதிகம் என்பதால், எல்லாம் சுமுகமாக முடிந்தது. உணர்ச்சிபூர்வமான விஷயம் என்பதால், சானியாவின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் இருந்து மீள கடுமையாக போராட வேண்டும். ஆனாலும், டென்னிஸ் வாழ்க்கையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. தொடர்ந்து விளையாடுவார்,''என்றார்.






