பக்தர்களின் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ சரண கோஷத்துடன் பழநியில் தைப்பூச தேரோட்டம்
பழநி: குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' சரண கோஷத்துடன் பழநியில் தைப்பூச தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடந்தது. பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் கடந்த 24ம் தேதி நடந்தது. கொடியேற்றத் திற்கு முதல் நாள் இரவு, பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் வாஸ்து சாந்தி நடந்தது. கொடியேற்றத்தன்று காலை, முத்துக்குமாரசாமி சன்னதி மண்டபத்தில் மயூரயாகம், முத்து குமாரசாமி, வள்ளி, தெய் வானைக்கு பால், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. காப்புக்கட்டுதலுக்கு பின் கொடிப்படம், முத்து குமாரசாமி, வள்ளி, தெய் வானை உட்பிரகாரம் சுற்றி வந்து கொடிகட்டி மண்டபத்திற்கு எழுந்தருளினர். வாத்ய பூஜை, வேதம், ஆகமங்கள், திருமுறைகள் முழங்க, ஓதுவார்கள் தேவார பாடல்களை பாட கொடியேற்றம் நடந்தது. கூடியிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என சரணகோஷம் எழுப்பினர். புதிதாக அமைக்கப் பட்டு உள்ள தங்க கொடிகம்பத்தில் முதன் முறை யாக கொடியேற்றப்பட்டது. மலைக்கோயிலிலும், திருஆவினன்குடி கோயிலிலும் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டுதல் நடந்தது.
தைப்பூசத்திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், வெள்ளித்தேரோட்டமும் நடந்தது. திருக்கல்யாணத்தை யொட்டி, பெரிய நாயகியம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம் ஆறு கலசங்கள் வைத்து கலச பூஜை, திருப்பொற்சுண்ணம் இடித்தல், 16 வகை அபிஷேகம் நடந்தது. ஸ்கந்த ஹோமத்துடன் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். பின்னர் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் வெள்ளித்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் ஏழாம் நாளான இன்று தைப்பூசமாகும்.அதிகாலை 4 மணிக்கே மலைக்கோயில் சன்னதி திறக்கப்பட்டது.காலை 5.30 மணிக்கு விளாபூஜை, சிறுகாலச்சந்தி, காலச்சந்தி கால பூஜைகள் நடந்தது.பாரவேல் மண்டபத்தில் 500 கிலோ பூக்களால் ஓம், வேல் அமைக்கப்பட்டு மலரால் தோரணமும் கட்டப்பட்டிருந்தது.பக்தர்கள் மயில்பீலி, சர்க்கரை, இளநீர், மலர் காவடிகளுடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ரோப்கார்,வின்சில் மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்தனர்.மலைக்கோயிலுக்கு பக்தர்கள் யானை பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆங்காங்கே பக்தர்களை தடுத்து நிறுத்தி (அடுக்கு முறையில்) அனுப்பியதால் மலைக்கோயில் வெளிப்பிரகாரங்களில் கூட்ட நெரிசல் இன்றி காணப்பட்டது. மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும்,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
தேரோட்டம்: தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கே சுவாமி சண்முகநதிக்கரையில் உள்ள தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார்.காலை 10.45 மணிக்கு மேல் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை தேர் ஏற்றம் செய்யப்பட்டனர். தேரடி தேர் நிலையில் இருந்து தேர் புறப்படும் முன் கூடியிருந்த பக்தர்கள் விடலை தேங்காய்களை உடைத்து தேரின் மீது பழங்களையும், நவதானியங்களையும் வீசினர்.நான்கு ரத வீதிகளில் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது.தேரோட்டத்தின் போது கூடியிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என சரணகோஷம் எழுப்பினர்.தேர் நிலையை அடைந்த உடன் கூடியிருந்த பக்தர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.






