குழந்தைகளுக்கு நுழைவு தேர்வு : எல்.கே.ஜி., யு.கே.ஜி., சேர்க்கையில் நடக்கும் கூத்து
குழந்தைகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தக்கூடாது என மத்திய மனித வளத்துறையின் குழந்தைகள் உரிமை சட்டம் அறிவுறுத்துவதை மதிக்காமல், எல்.கே.ஜி., யு.கே.ஜி., உள்ளிட்ட வகுப்புகளுக்கு கூட நுழைவுத்தேர்வு நடத்தும் முறைகளை மெட்ரிக் பள்ளிகள் கடைபிடித்து வருகிறது. அரசின் பெரும்பாலான விதிமுறைகள் தொடர்ந்து மீறி வரும் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் மீது அரசின் நடவடிக்கை கடுமையாக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.இ., உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நுழைவு தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்ப படிப்பு கிடைப்பதை தடை செய்கிறது என்ற காரணம் காட்டி தமிழகத்தில் இந்நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், முன்னணி தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்து வந்த நுழைவுத்தேர்வு தற்போது, பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் பரவி விட்டது. வேறு பள்ளிகளில் இருந்து யு.கே.ஜி., முதல் மேல்நிலைக்கல்வி வரையிலான எந்த வகுப்பில் சேர வேண்டும் என்றாலும், அப்பள்ளியின் நுழைவுத்தேர்வில் பாஸானால் மட்டுமே அட்மிஷன் வழங்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, "அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி மறுக்கப்படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் உரிமை சட்டத்தில் நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது' என அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது சட்டப்படி தவறான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் குழந்தைகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது தமிழகத்தில், குறிப்பாக சேலத்தில் பெரும்பாலான பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நடந்து வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடவடிக்கையே மே மற்றும் ஜூன் மாதத்தில் தான் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளை அரசு விதித்திருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்ட தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சட்டத்துக்கு புறம்பான நுழைவுத்தேர்வு நடத்தும் முறைகளையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என பெற்றோர் கருத்து தெரிவிக்கின்றனர்.






