பழநி தைப்பூச தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
பழநி : "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' சரண கோஷத்துடன், தமிழகமெங்கும் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டது. பழநி: தைப்பூச திருவிழா தேரோட்ட விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி தைப்பூச திருவிழா கடந்த 24ல் துவங்கியது. மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கே சுவாமி, சண்முக நதிக்கரையில் உள்ள தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். காலை 10.45 மணிக்கு மேல் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை தேர் ஏற்றம் செய்யப்பட்டனர். தேரோட்டத்தின் போது கூடியிருந்த பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர்.
திருச்செந்தூர்: முருகன் கோவில், அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டது. 2.30க்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர் சுப்ரமணியருக்கு உச்சி கால அபிஷேத்தை தொடர்ந்து சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாலையணிந்து, விரதமிருந்து பாத யாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள், காவடி மற்றும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி, நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசித்தனர்.
சென்னிமலை: அதிகாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், நேற்று காலை 6.20 மணிக்கு கயிலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. காலை 6.55 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. வழி நெடுக திரண்டிருந்த பக்தர்கள், தேர் மீது உப்பு, மிளகு, நிலக்கடலை, நெல் ஆகிய பொருட்களை தூவி முருகப் பெருமானை வழிபட்டனர்.
காலை 7.33 மணிக்கு தேர், தெற்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பின், மாலை வடம் பிடித்து வடக்கு ராஜவீதியில் நிறுத்தப்பட்டது. இன்று மாலை தேர் நிலையம் அடைகிறது.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம், பிப்ரவரி 3ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 8 மணியளவில் நடராஜப்பெருமானும், சுப்ரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவர். இதைக் காண, சென்னிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.






