ஜாதி மதம் இல்லாத மனப்பான்மை வளர செம்மொழி மாநாடு : மத்திய அமைச்சர் ராஜா பேச்சு
மேட்டுப்பாளையம் : ""ஜாதி, மத, பேதம் இல்லாத மனப்பான்மை வளர, மொழியால் மட்டுமே ஒன்று படமுடியும் என்ற உயர்ந்த நோக்கத்தில், முதல்வர் கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துகிறார்,'' என்று மத்திய அமைச்சர் ராஜா பேசினார்.
சிறுமுகை பேரூராட்சி புதிய அலுவலகம், வணிக வளாக கட்டடம் திறப்பு, அண்ணா மறுமலர்ச்சி திட்ட வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறுமுகையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார். சிறுமுகை பேரூராட்சி தலைவர் உதயகுமார் வரவேற்றார். பேரூராட்சி அலுவலக கம்ப்யூட்டர் மையத்தை தமிழக ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்து பேசினார்.
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா, சிறுமுகை பேரூராட்சி புதிய அலுவலகம், வணிக வளாக கட்டடத்தை திறந்து வைத்தும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசியதாவது: கிராமத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வியான மருத்துவம், பொறியியல் ஆகிய தொழில்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், முதல்வர் கருணாநிதி இலவச கல்வி கட்டண திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுமாதிரி இல்லை.
முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற போது,""56 ஆயிரம் கோடி கடனை ஜெயலலிதா விட்டுச் சென்றுள்ளார் என்ற விபரம் தெரியவந்தது. இந்த கடனை அடைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். ஜாதி, மத, பேதம் இல்லாத மனப்பான்மை வளர வேண்டும். இதற்கு மொழியால் மட்டுமே ஒன்று படமுடியும் என்ற உயர்ந்த நோக்கத்தில், முதல்வர் கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துகிறார். இதன் பயனாக கோவையின் உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு, அமைச்சர் ராஜா பேசினார்.
விழாவில், 446 பேருக்கு 11 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜா வழங்கினார். சிறுமுகையில் எரியூட்டு மின் மயானம் அமைக்க விஜயலட்சுமி பொது நல அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி 20 லட்சம் ரூபாயும், முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார் 2 லட்சம் ரூபாயும் நன்கொடையாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். பேரூராட்சி உதவி இயக்குநர் ஜாய் கிறிஸ்டல், தாசில்தார் சுகுமாரன், மன்ற துணை தலைவர் ரங்கராஜ், மன்ற உறுப்பினர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயல் அலுவலர் கல்யாணசுந்திரம் நன்றி கூறினார்.







