அடுத்த முதல்வரும் கருணாநிதி : மு.க.அழகிரி பேட்டி
மதுரை : ""வரும் 2011 சட்டசபைத் தேர்தலிலும் தி.மு.க., அமோக வெற்றி பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார்,'' என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

மதுரையில் நேற்று நடந்த பிறந்த நாள் விழாவில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:என் பிறந்த நாளையொட்டி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சிமயமாக வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகமானவர்கள் வந்தனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பிறந்த நாளையொட்டி, நாட்டிற்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை ஏற்கனவே நான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளேன்.
தம்பி மு.க.ஸ்டாலினும், நானும் 2011ல் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் இரட்டை குழல் துப்பாக்கிகள் போல செயல்படுவோம். எதிர்த்து போட்டியிடுவோரை தூள் தூளாக்குவோம். வரும் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெற்று, கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார். அவரது லட்சியம், வகுக்கும் பாதையில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். மதுரையில் தி.மு.க., நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த பெரிய கட்டடம், ஆறு மாதங்களில் கட்டப்படும். அது அறிவாலயம் போலிருக்குமா என இப்போது கூற இயலாது.இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.






