சச்சினை கவர்ந்த பாலிவுட் நட்சத்திரங்கள்
மும்பை: பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், பின்னணி பாடகிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகியோர் தான் தன்னை அதிகம் கவர்ந்தவர்கள், என, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர்' பேட்ஸ்மேன் சச்சின். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து, சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை குறித்து கோல்கட்டாவின் கவுதம் பட்டாச்சர்யா எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சச்சின் தெரிவித்துள்ள சில சுவாரஸ்யமான விஷயங்கள்:
வாழ்க்கையில் பல்வேறு வழிகளில், ஒருவர் ஊக்கம் பெறலாம். சிறப்பான பேச்சு அல்லது பரபரப்பான கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பைனல் கவர்ந்து இழுக்கலாம். என்னை பொறுத்தவரை பாலிவுட் நட்சத்திரங்கள் தான் ஊக்க சக்தியாக அமைந்தனர்.
சமீபத்தில் ஆஷா போன்ஸ்லேயின் தீவிர ரசிகராக மாறினேன். 75 வயதான நிலையிலும் அவர், வியக்கத்தக்க அளவில் செயல்படுகிறார். நன்கு அனுபவித்து பாடுகிறார். இவரது ஆற்றல் நம்பமுடியாத அளவில் உள்ளது. அதுபோல அமிதாப்பச்சன். இவரது அனைத்துப் படங்களும் எனக்கு பிடிக்கும்.
ஆச்சரியமாக உள்ளது: அமிதாப்பச்சன், ஆஷா போன்ஸ்லே, லதா மங்கேஷ்கர் ஆகிய மூவரும் என்னை கவர்வதற்கு, மும்பையில் இருந்து வந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இவர்களை பலமுறை சந்தித்துள்ளேன். ஆனால் நீண்ட ஆண்டுகளாக எப்படி, இவர்களால் தொடர்ந்து சாதிக்கமுடிகிறது என்பது தான், ஆச்சர்யமாக உள்ளது.
ரகுமானுக்கு பாராட்டு: அதுபோல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானையும் வியந்து பாராட்டியுள்ளேன். இவர் ஆஸ்கர் விருதுகளை வென்ற போது, நாங்கள் நியூசிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். அங்கிருந்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன்.
துணிச்சல் வேண்டும்: கிரிக்கெட் தவிர, எனது தந்தையின் இழப்பு, ராஜ் சிங் துங்கர்புர் மரணம் என தனிப்பட்ட சில விஷயங்களை விவரிப்பது மிகவும் கடினம். இதுபோன்ற சில சம்பவங்களை சந்திப்பதற்கு, துணிச்சல் வேண்டும். கடந்த 1999ல் இங்கிலாந்துக்கு உலக கோப்பை போட்டிக்கு சென்ற போது, எனது தந்தை மரணம் அடைந்ததால், இந்தியா திரும்பினேன். அப்போது எனது அம்மா உட்பட எல்லோரும் மீண்டும் விளையாட செல்லுமாறு கூறினர். ஏனெனில் எனது தந்தை இருந்திருந்தாலும் அதைத்தான் விரும்பியிருப்பார்.
லாராவுக்கு பாராட்டு: வெஸ்ட் இண்டீஸ் வீரர் லாராவை, முதன் முதலாக கடந்த 1990ல் சந்தித்தேன். பாகிஸ்தான் அணிக்கு எதிராக "ரெஸ்ட் ஆப் வேர்ல்டு' அணியில் இருந்த நாங்கள் இருவரும் இணைந்து 150க்கும் மேல் ரன்கள் எடுத்தோம். அவரது அனுபவ ஆட்டத்தை, மறுமுனையில் இருந்து ரசித்த பார்த்தது மறக்கமுடியாது. நான் எப்போதும் அவரை பின்பற்றியதில்லை. ஆனால் அவரது ஆட்டங்களை "டிவி'யில் தவறாமல் பார்ப்பேன். எனக்குப் பிடித்த வீரர்களில் லாராவும் ஒருவர். எங்களுக்குள் எந்த பகைமையோ, விரோதமோ இல்லை.
இவ்வாறு அந்த புத்தகத்தில் சச்சின் தெரிவித்துள்ளார்.






