கோப்பை வென்றது இந்தியா: 3வது போட்டியில் தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி
ஆமதாபாத்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் காலிஸ், டிவிலியர்ஸ் அபார சதம் அடிக்க, தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆறுதல் தேடியது. ஏற்கனவே தொடரை வென்ற இந்திய அணி, கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. நேற்று முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆமதாபாத்தில் நடந்தது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் காலிஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விஜய் அறிமுகம்:
இந்திய அணியில் சச்சின், சேவக், ஆஷிஸ் நெஹ்ரா, பிரவீண் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுதீப் தியாகி மற்றும் அறிமுக வீரராக தமிழகத்தின் முரளி விஜய், அபிமன்யு மிதுன் இடம் பெற்றனர். தென் ஆப்ரிக்க அணியில் பார்னல், டுமினி, ஆல்பி மார்கல், லாங்கிவெல்ட் நீக்கப்பட்டு போஸ்மென், போத்தா, மார்னே மார்கல், டிசாட்சொபே வாய்ப்பு பெற்றனர்.
போஸ்மென் அபாரம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு போஸ்மென், ஆம்லா ஜோடி அபார துவக்கம் கொடுத்தது. அதிரடியாக அரைசதம் கடந்த போஸ்மென் (68), யூசுப் பதானிடம் வீழ்ந்தார். அடுத்து ஆம்லாவுடன் இணைந்தார் காலிஸ். சர்வதேச கிரிக்கெட் அரங்கில், 7வது அரைசதம் கடந்த ஆம்லா (87), ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.
காலிஸ் கலக்கல்:
பின் காலிஸ், டிவிலியர்ஸ் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இந்திய வீரர்களின் பவுலிங்கை ஒருகை பார்த்தனர். முக்கியமாக தியாகி, அபிமன்யு மற்றும் ஸ்ரீசாந்தின் வேகப்பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ஸ்ரீசாந்தின் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்த காலிஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் 17 வது சதம் கடந்தார்.
அதிரடி டிவிலியர்ஸ்:
மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் டிவிலியர்ஸ். இவர் 58 பந்துகளில், தனது 7வது சர்வதேச சதத்தை எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 173 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு, 365 ரன்கள் குவித்தது. காலிஸ் 104 (3 சிக்சர், 5 பவுண்டரி), டிவிலியர்ஸ் 102 (3 சிக்சர், 11 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கார்த்திக் ஏமாற்றம்:
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக்(11), முரளி விஜய்(25) துவக்கத்தில் ஏமாற்றினர். பின் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா இணைந்து அணியின் ஸ்கோரை <உயர்த்த போராடினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் 48 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா, அரைசத வாய்ப்பை கோட்டை விட்டார். மறுமுனையில் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் அரங்கில், 6வது அரைசதம் கடந்தார். தோனி (9), ஸ்டைனின் வேகத்தில் வெளியேறினார். இதே ஓவரின் கடைசி பந்தில் கோஹ்லியும் (57) அவுட்டானார்.
இந்தியா தோல்வி:
இருமுறை கண்டம் தப்பிய ரெய்னா, 49 ரன்னுடன் திரும்பினார். யூசுப் பதான் (5), ஸ்ரீசாந்த் (1), அபிமன்யு (24), ரவிந்திர ஜடேஜா (36) ஆகியோர் ஏமாற்ற, இந்திய அணி 44.3 ஓவரில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், டிசாட்சொபே தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இப்போட்டியில் தோற்றாலும், இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று, கோப்பையை கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் பெற்றார். தொடர் நாயகன் விருது இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு வழங்கப்பட்டது.
அதிவேக சதம்:
இந்திய பந்துவீச்சை சிதறடித்த தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ், 58 பந்துகளில் சதம் கடந்தார். இது ஒருநாள் அரங்கில் ஏழாவது அதிவேக சதமாக அமைந்தது. இப்பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிதி 37 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
அதிகபட்ச ஸ்கோர்:
நேற்று அபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை (365/2) பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 2000ல் நாக்பூரில், 7 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்திருந்தது. தவிர, ஆமதாபாத் மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிக ஸ்கோராகவும் அமைந்தது. முன்னதாக இங்கு, இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 325 ரன்கள் (எதிரணி-வெ.இண்டீஸ், 2002) எடுத்தது.
சாதனை ஜோடி:
காலிஸ், டிவிலியர்ஸ் ஜோடி, மூன்றாவது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தது. இது இரு அணிகள் இடையே, மூன்றாவது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக அமைந்தது.
ஸ்கோர் போர்டு
தென் ஆப்ரிக்கா
போஸ்மென் (கே)ஜடேஜா (ப)யூசுப் 68(46)
ஆம்லா (கே)முரளி விஜய் (ப)ஜடேஜா 87(103)
காலிஸ் -அவுட் இல்லை- 104(94)
டிவிலியர்ஸ் -அவுட் இல்லை- 102(59)
உதிரிகள் 4
மொத்தம் (50 ஓவரில் 2 விக்.,) 365
விக்கெட் வீழ்ச்சி: 1-113(போஸ்மென்), 2-192(ஆம்லா).
பந்துவீச்சு: ஸ்ரீசாந்த் 9-0-83-0, சுதீப் தியாகி 8-0-59-0, மிதுன் 8-0-63-0, ஜடேஜா 10-0-53-1, யூசுப் 10-0-66-1, கோஹ்லி 2-0-11-0, ரோகித் 3-0-28-0.
இந்தியா
கார்த்திக் (கே)ஆம்லா (ப)ஸ்டைன் 11(11)
முரளி விஜய் (கே)பவுச்சர் (ப)டிசாட்சொபே 25(16)
கோஹ்லி (கே)பவுச்சர் (ப)ஸ்டைன் 57(71)
ரோகித் (கே)டிசாட்சொபே (ப)போத்தா 48(61)
தோனி (கே)பவுச்சர் (ப)ஸ்டைன் 9(7)
ரெய்னா (கே)சப்-பார்னல் (ப)போத்தா 49(30)
யூசுப் (கே)ஸ்டைன் (ப)டிசாட்சொபே 5(8)
ஜடேஜா (கே)பவுச்சர் (ப)டிசாட்சொபே 36(35)
ஸ்ரீசாந்த் எல்.பி.டபிள்யு., (ப)மெர்வி 1(3)
மிதுன் (ஸ்டம்டு)பவுச்சர் (ப)மெர்வி 24(23)
சுதீப் தியாகி -அவுட் இல்லை- 1(2)
உதிரிகள் 9
மொத்தம் (44.3 ஓவரில் "ஆல்-அவுட்') 275
விக்கெட் வீழ்ச்சி: 1-22(கார்த்திக்), 2-40(முரளி விஜய்), 3-135(ரோகித்), 4-156(தோனி), 5-157(கோஹ்லி), 6-179(யூசுப்), 7-233(ரெய்னா), 8-237(ஸ்ரீசாந்த்), 9-273(மிதுன்), 10-275(ஜடேஜா).
பந்துவீச்சு: ஸ்டைன் 8-1-37-3, டிசாட்சொபே 9.3-0-58-3, மார்கல் 7-0-48-0, மெர்வி 10-0-47-2, போத்தா 10-0-80-2.






