பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற கருணாநிதி கோரிக்கை
சென்னை : ""பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகளையும், சாதாரண மக்களையும் கடுமையாக பாதிக்கச் செய்யும் என்பதால், விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்,'' என்று, தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் கருணாநிதி நேற்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: மிகச்சிறந்த பட்ஜெட்டை சமர்ப்பித்தமைக்காக, உங்களையும், மத்திய அரசையும் நான் வெகுவாக பாராட்டுகிறேன்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நோக்கத்தை மனதில் கொண்டு, வளர்ச்சி மற்றும் ஒட்டு மொத்த பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதே நேரத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை, உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்களின் விலையேற்ற பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் சிக்கியிருந்ததை நீங்கள் அறிவீர்கள். டீசல் விலையை எந்த வகையில் உயர்த்தினாலும், அது உணவுப்பொருள் விலைக்கும் மட்டுமல்லாமல், மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாக அமைந்துவிடும்.
எனவே, விலை உயர்வை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம், டீசல் விலை உயர்வையாவது திரும்பப் பெற்று, விவசாயிகளையும், சாதாரண மக்களையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.இதே கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் தனித்தனியே முதல்வர் அனுப்பியுள்ளார்.






