காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக பிச்சைக்காரர்களை ஒழிக்க தீவிர முயற்சி
புதுடில்லி:காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பிச்சைக்காரர்களை ஒழிக்க, டில்லி அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.டில்லியில் வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் துவங்குகின்றன. இந்த போட்டியில் பங்கேற்க, உலகம் முழுவதுமிருந்து விளையாட்டு வீரர்களும், சுற்றுலாப் பயணிகளும் வர உள்ளனர். அந்த சமயத்தில் டில்லியில் பிச்சைக்காரர்கள் யாரும் இருக்கக் கூடாது, என டில்லி அரசு திட்டமிட்டுள் ளது. இதற்காக சமூக நலத்துறை சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டில்லியில் ஒரு லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். பல்வேறு காரணங்களால் பிச்சையெடுப்பவர்கள் ஏராளம். உண்மையிலேயே மற்ற வேலை செய்து பிழைக்க முடியாத வயதானவர்களும், நோயாளிகளும் பிச்சையெடுக்கின்றனர். வேலை கிடைக்காததால் சிலர் பிச்சையெடுக்கின்றனர்."பிச்சையெடுப்பதை தடுக்க வழி செய்யும் 1959ம் ஆண்டு சட்டத்தை பயன்படுத்தி, பிச்சைக்காரர்களை கைது செய்ய முடியும். ஆனால், டில்லியில் உள்ள சிறைகள் ஏற்கனவே, குற்றவாளிகளால் நிரம்பி வழிகிறது. பிச்சைக்காரர்கள் மறு வாழ்வு இல்லத்தில் அதிகபட்சம் இரண்டு ஆயிரத்து 200 பேரை தங்க வைக்கலாம். எனவே. ஒட்டு மொத்தமாக ஒரு லட்சம் பிச்சைக்காரர்களை கைது செய்வது இயலாத காரியம்' என, இங்குள்ள சமூக தொண்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
பிச்சைக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. "பயங் கர குற்றவாளிகள் எல் லாம் சகஜமாக நடமாடிக் கொண்டிருக்க, வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சையெடுப்பவர்களை கைது செய்வதா?' என, இந்த அமைப்புகள் போர்க் கொடி தூக்குகின்றன.பிச்சைக்காரர்களை கைது செய்வதை கண்டித்து, பொதுமக்கள் நலன் கோரும் மனுவும் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனித உரிமை அமைப்பை சேர்ந்த வக்கீல் கோலின் கொன்சால்வஸ் குறிப்பிடுகையில், "காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் யாரும் பிச்சைக்காரர்களை எதிர்க்க மாட்டார்கள். அப்படி அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால், பிரதமருக்கும், டில்லி முதல்வருக்கும், தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதட்டும்' என்றார்.






