குறைந்தது மூலப்பொருட்கள் விலை; குறையவில்லை சாப்பாடு விலை
கடந்த சில வாரங்களாக காய்கறி, அரிசி, மளிகை பொருட்களின் விலை அதிரடியாகக் குறைந்து வரும் நிலையில், ஓட்டல்களில் இவற்றை மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்படும் டிபன் மற்றும் சாப்பாட்டின் விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்ந்தால், அதற்கேற்ப உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துபவர்கள், விலை குறையும் போது மட்டும், உணவுப் பொருட்களின் விலையை குறைக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொள்ளை லாபம் பார்க்கும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது முதல்வர், "சாட்டை'யை சுழற்றினால், விலை குறையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோயம்பேடு மார்க் கெட்டிற்கு, கர்நாடகாவில் இருந்து 80 சதவீத காய்கறிகளும், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 20 சதவீத காய்கறிகளும் பல ஆயிரம் மூட்டைகளில் தினமும் வந்து குவிகின்றன. ஒரு மாதம் முன்பு வரை உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை, கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, 350 லோடு காய்கறிகளுக்கு பதிலாக, தற்போது 450 லோடு லாரிகளுக்கு மேல் காய்கறிகள் வருகின்றன. இதனால், அதன் விலையும் பெருமளவு குறைந்து வருகிறது. கிலோ தக்காளி 5 ரூபாய், 25 ரூபாய்க்கு விற்று வந்த அவரைக்காய் 9 ரூபாய், 30 ரூபாய் வரை விற்கப்பட்ட பெல்லாரி வெங்காயம் 13 ரூபாய், உருளைக்கிழங்கு 7 ரூபாய் என அதிரடியாக விலை குறைந்துள்ளது.
மொத்த வியாபாரத்தில் முட்டைகோஸ் வாங்கினால், ஒரு கிலோ ஒரு ரூபாய் 50 பைசா தான். இந்த குறிப்பிட்ட காய்கறிகள் தான் ஓட்டல்களில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. மேலும், பீன்ஸ், சவ்சவ், பீட்ரூட், கத்தரிக்காய், கோவைக்காய், சுரைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ ஒன்று 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் அளவில் கிடைக்கிறது. இது, வரும் வாரங்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். காய்கறி விலைகளை தொடர்ந்து மத்திய அரசின் முயற்சியால் அரிசி, பருப்பு, எண்ணெய் வகைளின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், ஓட்டல்களில் டிபன் மற்றும் சாப்பாடு விலை குறையுமா என்று, தினமும் ஓட்டலில் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், குறைவதற்கு பதில், நாளுக்கு நாள் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருப்பது, பொது மக்களை மட்டுமில்லாமல், ஓட்டல்களையே நம்பி மேன்ஷன்களில் வசிக்கும் இளைஞர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயரும் போது, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துபவர்கள், விலை குறையும் போது, விலையை குறைக்காதது எந்த வகையில் நியாயம் என்றும் பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஓட்டல்களில் உள்ள நிலைமை குறித்து, அதன் வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதாவது: பொதுவாக காய்கறி மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் போது, ஓட்டல்களில் டிபன் மற்றும் சாப்பாட்டின் விலையை திடீரென அதன் உரிமையாளர்கள் உயர்த்துவர். ஆனால், காய்கறி விலை குறைந்த நிலையில், சாப்பாட்டின் விலையையும் குறைக்கலாம். தரம் குறைந்த காய்கறிகளையே ஓட்டல்களில் அதிகளவு பயன்படுத்துகின்றனர். காய்கறி விலை குறைந்துள்ளதால், குறைந்தபட்சம் தரமான காய்கறிகளையாவது வாங்கிப் போடலாம். ஆனால், லாபம் அதிகம் எதிர்பார்க்கும் ஓட்டல் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களின் வயிற்றை நினைத்துப் பார்ப்பதில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விலைவாசி உச்சத்தில் இருந்தபோது, 20 ரூபாய்க்கு சாப்பாடு போட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அந்த உத்தரவை அப்போதே, பெரும்பாலான ஓட்டல்கள் கடைபிடிக்கவில்லை. காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை குறைந்துள்ள இந்நிலையிலாவது, தரமான காய்கறிகளைக் கொண்டு உணவுப் பொருட்களை வழங்கவும், பகல் கொள்ளை அடிக்கும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது, "சாட்டை' யை சுழற்றவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒரு கரண்டி கிச்சடி 25 ரூபாய் நியாயமா? காய்கறிகள் மற்றும் ரவை கொண்டு செய்யப்படும் ஒரு கரண்டி கிச்சடி 15 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை விற்கின்றனர். இது போல், ஆனியன் தோசை 15 ரூபாயில் இருந்து 28 ரூபாய் வரை விற்கின்றனர். அரிசி, உளுந்து, வெங்காயம் விலை அதிரடியாகக் குறைந்துள்ள நிலையில், தோசையின் விலையை குறைக்கவில்லை. "வெஜிடபிள் ரைஸ்' என்ற உணவு மட்டும் 20 ரூபாயில் இருந்து 35 ரூபாய் வரை விற்கின்றனர். அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும், "ஆம்லெட்' விலையில் ஏறியும், அளவில் சுருங்கியும் போகிறது.






