மதுகோடா ரூ. 4,000 கோடி ஊழல் விசாரணை புஸ்ஸ்…?
புதுடில்லி :ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான ஊழல் விசாரணை தொடர்ந்து நியாயமாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மதுகோடா மீது 4,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கு போடப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கி பலமுறை பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்தனர்.கோடாவுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட நிலையில், வருமான வரித்துறை அதிகாரி உஜ்வல் சவுத்ரியை மத்திய அரசு திடீரென இடமாற்றம் செய்துள்ளது பெரும் திருப்பமாக அமைந்தது.இதுவரை ஒழுங்காக போய்க் கொண்டிருந்த கோடா மீதான விசாரணையில் நடந்த இந்த அதிரடி மாற்றம், பல்வேறு தரப்பிலும் பலவிதமான சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
மதுகோடாவோடு, பெரிய பெரிய அரசியல்வாதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் இருந்த தொடர்பை சவுத்ரி கண்டுபிடித்துவிட்டதால் தான் அவர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.இந்த இடமாற்ற விவகாரத்தில், ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலையிட வேண்டும் என்று அம்மாநில வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், உஜ்வல் சவுத்ரியை போலவே, அவரது சக அதிகாரிகளும் தூக்கியடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.






