அரளிப்பாறை மஞ்சுவிரட்டுகாளைகள் முட்டி 50 பேர் காயம்
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில், 50 பேர் காயமடைந்தனர். மலைமீதுள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் மாசி மக திருவிழா நேற்று நடந்தது. மதுரை, திருச்சி,திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 139 காளைகள் பங்கேற்றன. கால்நடை டாக்டர்கள் குழு சோதனையில் 10 காளைகள் தள்ளுபடி செய்யப்பட்டன.மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்தனர்.காலை 11 மணிக்கு கட்டு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
பொன்னம்பலஅடிகள் முன்னிலையில் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பிறகு தொழுவத்தில் மஞ்சுவிரட்டு நடந்தது. ஐந்து நிலை நாட்டார் சார்பில் காளைகளுக்கு வேட்டிகள் வழங்கினர். பின் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக திறந்துவிடப்பட்டன. காளைகளை பிடிக்க வந்த வீரர்களை மாடுகள் முட்டியதில், கொட்டகுடி முனியாண்டி (33), மாதவிராயன்பட்டி சுரேஷ்(26), புதுக்கோட்டை ராஜ்கபூர், திருக்குளம்பூர் தனராஜ் (33) உட்பட 50 பேர் வரை காயமுற்றனர். இதில், பலத்த காயமடைந்த மு.அய்யாபட்டி மணி (37), ஓடைப்பட்டி முத்தையா(56) மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டனர். தேவகோட்டை ஆர்.டி.ஓ.,அண்ணாத்துரை, திருப்புத்தூர் தாசில்தார் விஜயராணி, டி.எஸ்.பி., முருகேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.






