மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அதிகரிப்பு
பெங்களூரு:இந்தியாவில், மொபைல் போனில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, கடந்தாண்டை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.கடந்தாண்டு துவக்கத்தில், 80 லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் மட்டுமே, மொபைல் போனில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தினர். ஆனால், தற்போது, இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் இந்தியா மொபைல் இன்டர்நெட் சேவைப் பிரிவு உற்பத்தி மேலாளர் ஆலோக் கோயல் என்பவர் கூறுகையில்,"இந்தியாவில், மொபைல் போன் மூலம் தகவல் சேகரிப்பவர்கள் எண்ணிக்கை, முன்னர் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்தாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதை கண்டறிந்தோம்' என்றார். ஜி.பி.ஆர்.எஸ்., சேவையுடன் கூடிய மொபைல் போன் முன்பு ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது, அது 2,000 ரூபாய்க்கே கிடைக்கிறது. இது தான், மொபைல் போன் இன்டர்நெட் வாடிக்கையாளர்களின் அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டாடா டோக்கோமோ நிறுவன தலைவர் தீபக் குலாட்டி கூறுகையில்,"எங்களின் வாடிக்கையாளர்களில் 40 சதவீதம் முதல் 45 சதவீதத்தினர், தங்கள் மொபைல் போனில் ஜி.பி.ஆர்.எஸ்.,யை ஆக்டிவேட் செய்துள்ளனர்' என்றார்.ஏர்டெல், டாடா டோக்கோமோ மற்றும் ஏர்செல் போன்ற மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் சேவை வழங்க, 100 ரூபாய்க்கும் குறைந்த கட்டணத்தில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன.உதாரணமாக, ஏர்செல் நிறுவனம் 98 ரூபாய்க்கு பாக்கெட் இன்டர்நெட் கார்டு வழங்குகிறது. மேலும், 14 ரூபாய்க்கு மூன்று நாள் திட்டத்தையும் அறிவித்துள்ளது.






