ஜெர்மனியிடம் “டிரா’ செய்தது தென் கொரியா கொரியா
புதுடில்லி: உலக கோப்பை ஹாக்கி தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, ஜெர்மனி-தென் கொரியா இடையிலான போட்டி "டிரா'வில் முடிந்தது. மற்றொரு போட்டியில் நியூசிலாந்து அணி, கனடாவை வீழ்த்தியது.
டில்லியில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஜெர்மனி, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று "ஏ' பிரிவில் லீக் போட்டிகள் நடந்தது. நடப்பு சாம்பியன் "இளம்' ஜெர்மனி அணி தனது முதல் ஆட்டத்தில் ஆசியாவின் வலுவான அணியான தென் கொரியாவை எதிர்கொண்டது.
போட்டியின் முதல் இரு நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு, அடுத்தடுத்து இரண்டு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை கோலாக மாற்றத் தவறினர். பதிலடி தாக்குதலை ஆரம்பித்த தென் கொரியா அணிக்கு 3வது நிமிடத்தில் "அம்பயர் ரெபரல்' முறையில் "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை அருமையாக பயன்படுத்திய சுங் ஹியுன், கோலாக மாற்றினார். இதையடுத்து தென் கொரியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.
தென் கொரியா முன்னிலை:
ஆட்டத்தின் 15 வது நிமிடத்தில் தென் கொரியாவின் யோங் லீ, "ரிவர்ஸ் ஷாட்' மூலம் ஒரு கோல் அடிக்க, 2-0 என முன்னிலை பெற்றது. பெரும்பாலான நேரங்களில் பந்து, ஜெர்மனி வசம் இருந்த போதும், முதல் பாதியில் தென் கொரியா அணி 2-0 என முன்னிலை பெற்றது. ஜெர்மனி அணி தனக்கு கிடைத்த ஐந்து "பெனால்டி கார்னர்' வாய்ப்புகளையும் வீணாக்கியது.
ஆவேச தாக்குதல்:
இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கிய உடன், பின்தங்கி இருந்த ஜெர்மனி அணியினர் ஆவேச தாக்குதலை துவக்கினர். மொத்தமுள்ள 11 வீரர்களில் 9 பேர் தாக்குதல் ஆட்டம் ஆடினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. புளோரியன் பக்ஸ் (50வது நிமிடம்) தனது அணிக்காக, முதல் கோல் அடித்தார்.
போட்டி "டிரா':
தொடர்ந்து அபாரமாக ஆடிய ஜெர்மனி அணிக்கு, 58வது நிமிடத்தில் கிடைத்த 6வது "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி பெஞ்சமின், மற்றொரு கோல் அடிக்க, ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. ஆட்டநேரம் முடியும் வரை இரு அணியினரும் மேலும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது.
நியூசி., வெற்றி:
இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் நியூசிலாந்து, கனடா அணிகள் மோதின. இதில் கனடா அணிக்கு மார்க் பியர்சன், பிலிப் ரைட் ஆகியோர் 2 மற்றும் 20 வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர். நியூசிலாந்து சார்பில் இந்திய வம்சாவளி வீரர் பிரியேஷ் (11வது நிமிடம்), நிக்கோலஸ் (47வது நிமிடம்) ஆகியோர் ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. ஆட்டம் முடிவதற்கு சற்று முன் (67வது நிமிடம்), நியூசிலாந்து வீரர் ரேயான், அருமையான பீல்டு கோல் அடித்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
"ஹாட்ரிக்' கோல்:
அர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி, ஆரம்பம் முதலாகவே ஆதிக்கம் செலுத்தி வந்தது. போட்டியின் 13, 35 மற்றும் 61வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டேகியமா, "ஹாட்ரிக்' கோல் அடித்து, அசத்தினார். இந்த மூன்று கோல்களையும், "பெனால்டி கார்னர்' முறையில் இவர் அடித்தார். அர்ஜென்டினா அணி தனக்கு கிடைத்த அனைத்து "பெனால்டி கார்னர்' வாய்ப்புகளையும் வீணாக்கியது. இறுதியில் நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில், அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
கொரிய அணி அப்பீல்:
நேற்றைய போட்டியில் 50வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் புளோரியன் பக்ஸ், வேகமாக அடித்த பந்து, தென் கொரியா வீரர்களை ஏமாற்றி கோலாக மாறியது. ஆனால் இதை எதிர்த்து இந்த அணி, "அம்பயர் ரெபரல்' முறையில் முறையிட்டது. ஆனால் "டிவி' ரீப்ளேயில் மூன்றாவது அம்பயர் ஜெர்மனி வீரர் அடித்த கோல், சரியானது தான் என தீர்ப்பு வழங்கினார்.






