பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் இல்லை : மன்மோகன் பேட்டி
புதுடில்லி :""பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் பெறப்படாது,'' என, பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவில் இருந்து டில்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த விலை உயர்வை கிரகித்துக் கொள்ளும் அளவுக்கு, நம்நாட்டு பொருளாதாரத்திற்கு திறன் உண்டு. இதனால், பணவீக்கம் அதிகரிக்காது. எந்த விலையை உயர்த்தினாலும், அது மக்களைப் பாதிக்கத்தான் செய்யும். இருந்தாலும், நீண்ட காலத்தை கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்க வேண்டும்.பொதுமக்களுக்கு சாதகமான கவர்ச்சிகரமான நிதிக் கொள்கையைப் பின்பற்றும் போது, பணவீக்கத்தில் இருந்து அவர்களை நாம் காப்பாற்ற முடியாது.
ஏனெனில், இந்த கவர்ச்சிகரமான கொள்கைகள், நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் முதலீடு வரும் சாதகமான சூழ்நிலையை கெடுத்து விடும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதும் கெட்டு விடும். ஏழை மக்களை மேம்பாடு அடையச் செய்யத் தேவையான திட்டங்களில் அரசு முதலீடு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும்.எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் செயல்பட வேண்டும். எரிபொருள்கள் விலை உயர்த்தப்பட்டதால், மொத்த விலை குறியீட்டெண்ணில் 0.40 சதவீத அளவுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். ராபி பருவத்தில் விளைச்சல் நன்றாக இருந்து, சந்தைக்கு அதிக அளவில் பொருட்கள் வரும் போது, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் குறையும். தவிரவும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வானது எவ்வித பணவீக்க பாதிப்பையும் ஏற்படுத்தாது .இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.






