பிச்சைக்காரர்களை சொந்த மாநிலங்களுக்குதிருப்பி அனுப்ப டில்லி அரசு முடிவு
புதுடில்லி:டில்லியில் உள்ள பிச்சைக்காரர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.டில்லியில் அக்டோபர் 3ம் தேதி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் துவங்குகின்றன. இந்த போட்டியில் பங்கேற்க ஏராளமான வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும், சுற்றுலா பயணிகளும் டில்லி வருகின்றனர்.டில்லியில் ஏறத்தாழ ஒரு லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். காமன் வெல்த் விளையாட்டு போட்டிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சூழ்ந்து கொண்டு பிச்சை எடுப்பதை தடுக்க பிச்சைக்காரர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பலாம், என டில்லி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.முன்னதாக, இந்த பிச்சைக்காரர்களை கைது செய்து, சிறையில் அடைக்கலாம், என திட்டமிடப்பட்டது. ஆனால், ஏற்கனவே டில்லி சிறைகள் எல்லாம் குற்றவாளிகள் மற்றும் விசாரணை கைதிகளால் நிரம்பி வழிகின்றன.
அதுமட்டுமல்லாது, மனித உரிமை அமைப்புகளும் பிச்சையெடுப்பவர்களை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து வந்தன. பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கலாம், என்றால் போதுமான அளவுக்கு அந்த இல்லங்களிலும் இடவசதியில்லை.டில்லியில் பிச்சையெடுப்பவர்கள் 95 சதவீதம் பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் 27 சதவீதம் பேரும், பீகாரை சேர்ந்தவர்கள் 17 சதவீதம் பேரும், மேற்கு வங்கம் மற்றும் அரியானாவை சேர்ந்தவர்கள் தலா 5 சதவீதம் பேரும் டில்லியில் பிச்சையெடுக்கின்றனர். டில்லியில் பிச்சையெடுப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம்.
எனவே, பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் டில்லியில் பிச்சையெடுப்பதை விரும்புகின்றனர்.காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் துவங்குவதற்கு முன்னர், டில்லியில் உள்ள பிச்சைக்காரர்களையெல்லாம் பிடித்து, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப டில்லி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பி அனுப்பப்படும் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.






