எம்.எல்.ஏ.,க்கள் 2 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் : பதவி பறிப்பு மனுவிற்கு பதிலளிக்க கோரிக்கை
சென்னை : ""அ.தி.மு.க., கொடுத்த புகாரின் அடிப்படையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ராஜேந்திரனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்,'' என்று, சபாநாயகர் ஆவுடையப்பன் கூறினார். இவர்களின் பதவியைப் பறிக்கக் கோரி அ.தி.மு.க.,வினர் கொடுத்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, இந்த இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக, ஆளுங்கட்சி பக்கம் சாய்ந்து வருகின்றனர். முதலில், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.வி.சேகர், சட்டசபையில், தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால், அவரை கட்சியில் இருந்து நீக்கி ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதனால், அவர் எக்கட்சியையும் சாராத எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார். சட்டசபையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர், சமீபத்தில் அடுத்தடுத்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினர். உடனே, கட்சிப் பதவிகளில் இருந்து இருவரையும் ஜெயலலிதா நீக்கினார். ஆனால், அடிப்படை கட்சி உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கவில்லை.ஜெ., நடவடிக்கை எடுத்ததும், தொகுதி பிரச்னையை தீர்க்கக்கோரி, மனு கொடுப்பதற்குத் தான் முதல்வரையும், அமைச்சர்களையும் சந்தித்ததாக, அவர்கள் விளக்கமளித்தனர்.
ஆனால், கடந்த 20ம் தேதி நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், ராதாகிருஷ்ணனும், ராஜேந்திரனும் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில், அ.தி.மு.க., தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ.,க்கள் சேகர்பாபு, செந்தமிழன் ஆகியோர், கடந்த 22ம் தேதி சபாநாயகர் ஆவுடையப்பனைச் சந்தித்து மனு அளித்தனர்.அதில், "ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகிய இருவர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அவர்களின் பதவியை பறிக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
மனு மீதான நடவடிக்கை குறித்து, சபாநாயகர் ஆவுடையப்பனிடம் நேற்று கேட்டபோது, அவர் கூறியதாவது:அ.தி.மு.க., அளித்த புகார் மனு குறித்து, விளக்கம் அளிக்குமாறு, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் இருவருக்கும் இன்றைக்குள் நோட்டீஸ் அனுப்பப்படும். நேரிலும், கடிதம் மூலமாகவும் அவர்களிடம் இருந்து விளக்கம் பெற்றதும், அவர்கள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.பட்ஜெட் நிறைவேற்ற, வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. அதற்குள், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விடும். புதிய சட்டசபை வளாக திறப்பு விழா, நிர்ணயித்தபடி வரும் 13ம் தேதி நடக்கும்.இவ்வாறு சபாநாயகர் கூறினார்.
சட்டசபை செயலக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, "ஓரிரு நாளில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்' என்றனர். அவர்களின் பதவி தப்புமா, பறிக்கப்படுமா என்பது, அவர்கள் தரும் விளக்கத்திற்குப் பிறகே தெரியும்.






