சட்டசபை வளாகத்துக்கு ரூ.2 கோடியில் ‘செட்டிங் டூம்’ அமைக்கும் பணி தீவிரம்
சென்னை : புதிய சட்டசபை வளாகம் திறப்பதற்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ளதால், பிரபல சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி மூலம் கட்டடத்திற்கு, "செட்டிங் டூம்' அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டு கோடி ரூபாய் செலவில், ஒரு வாரத்திற்குள் "டூம்'அமைக்கும் பணி முடிவடையும் என, தோட்டா தரணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டசபை வளாகம், வரும் 13ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என பல முக்கியத் தலைவர்கள், விழாவில் கலந்து கொள்கின்றனர். முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங் கும் பணி நடந்து வருகிறது. குறிப்பிட்ட தேதியில் சட்டசபை வளாகத்தை திறக்க வேண்டும் என்பதற்காக, முதல்வர் கருணாநிதி அடிக்கடி நேரில் சென்று, கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட்டு வந்தார். எனினும், இறுதிக் கட்டப் பணிகள் நிறைவு பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சட்டசபை கட்டடத்திற்கு அழகு சேர்க்கும் மேற்கோபுரம் (டூம்) கட்டுமானப் பணியை துவக்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம், 25 கோடி ரூபாய்க்கு, "டூம்' கட்டும் பணியை டெண்டர் எடுத்துள்ளது. 30 மீட்டர் உயரமும், 45 மீட்டர் அகலமும் கொண்டதாக மேற்கோபுரம் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "பல்வேறு ஆய்வுகள் மேற் கொண்ட பிறகே, "டூம்' கட்டும் பணி ஆரம்பமாகும். 800 டன் எடையைக் கொண்ட கட்டடத்தின் மேற்கூரையை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பு மிகுந்ததாகவும் கட்ட வேண்டும்.அதற்கான ஆய்வு மேற் கொள்ளவே ஒரு மாதம் தேவைப் படும். எனவே, திறப்பு விழாவுக்கு, "டூம்' தயாராகாது என்பதால், மாற்று நடவடிக்கையாக, "செட்டிங் டூம்' அமைக்க நடவடிக்கை எடுத்தோம்' என்றார்.
கட்டடத்தின் அழகுக்கு மெருகூட்டுவதே, மேற்கோபுரம் தான். அது தயாராகாமல், விழாவை நடத்துவது சிறப்பாக இருக்காது என்று, முதல்வர் கருதியதாக கூறப்படுகிறது. அதனால், பிரபல சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியை முதல்வர் அழைத்து, அசல் மேற்கூரையைப் போன்று, "செட்டிங் டூம்' அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.அதன்படி, தோட்டா தரணி குழுவினர் பம்பரமாய் சுழன்று இரண்டு கோடி ரூபாய் செலவில், "செட்டிங் டூம்' அமைக்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். தரணியின் மேற்பார்வையில், "ஓ.எச்.எம். டெக்கர்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த 500 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
"எடை குறைவான ஸ்டீல், பெயின்ட் மற்றும் மரத் துண்டுகளை பயன்படுத்தி, தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணியை செய்து வருகிறோம். இந்தப் பணி ஒரு வாரத்திற்குள் முடிந்துவிடும். பார்ப்பதற்கு கட்டடத்தின் அசல் மேற்கோபுரம் போன்றே அழகாக இருக்கும்' என்று, தோட்டா தரணி குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.திறப்பு விழாவிற்குப் பின், சட்டசபை முதல் கூட்டத்தொடர் முடியும் வரை, "செட்டிங் டூம்' இருக்கும். அதன்பின், அவை அகற்றப்பட்டு அசல் டூம் கட்டுமானப் பணிகள் துவங்கும்.






