வினோத நோயால் தடைபட்ட கல்வி : பள்ளி செல்ல தயாராகும் ‘பாதங்கள்’
சிவகங்கை : "எரித்ரோமெல்ஜியா' என்ற நோயால் அவதிப்பட்டு, குணமடைந்த வரகுணபாண்டியன், பாதியில் கைவிட்ட படிப்பை மீண்டும் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே காளையார்கோவில் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் வரகுணபாண்டியன் (14). கால் பாதத்தில் தீராத எரிச்சல் ஏற்பட்டது. இதனால், 24 மணி நேரமும் பாதத்தை தண்ணீரில் மூழ்கி வைத்து கடும் அவதிப்பட்டார். இதுகுறித்து, தினமலர் இதழில் செய்தி வெளியிடப்பட்டது. மதுரை வடமலையான் மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தார். கடந்த 2008-09ல் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது நோய் தாக்கியதால், படிப்பு தடைபட்டது. தற்போது படிப்பை தொடர, டாக்டர்களிடம் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, வடமலையான் மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் ஹேமாலட்சுமி, நேற்று இவரை சிவகங்கை அழைத்து வந்தார். அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் நாச்சியாரிடம் ஒப்படைத்து, படிப்பை தொடர வேண்டினார். அவரை காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.






