நடிகர் சிங்கமுத்துவிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை
சென்னை : நடிகர் வடிவேலு கொடுத்த நிலமோசடி புகாரில், காமெடி நடிகர் சிங்கமுத்துவிடம் போலீசார் நேற்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
காமெடி நடிகர் வடிவேலு தன்னுடன் நடித்த மற்றொரு காமெடி நடிகரான சிங்கமுத்துவுக்கு எதிராக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிலமோசடிப் புகார் கொடுத்தார். இவ்வழக்கில் கைது செய்யப்படலாம் எனக் கருதிய நடிகர் சிங்கமுத்து, சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் சிங்கமுத்து, நேற்று காலை 10 மணிக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு வழக்கு விசாரணை அதிகாரி மைனர்சாமி முன் ஆஜராகி கையெழுத்து போட்டார். அப்போது, நடிகர் சிங்கமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று காலை 10:15 மணிக்கு துவங்கிய விசாரணை, இரண்டு மணி நேரம் நீடித்தது. அப்போது, வடிவேலுவுடன் ஏற்பட்ட பழக்கம் மற்றும் நிலமோசடி வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்துவிடம் போலீசார் விசாரித்தனர். பின், சிங்கமுத்துவின் கைரேகைகள் மற்றும் கையெழுத்து பிரதிகளையும் போலீசார் பெற்றனர்.
போலீஸ் விசாரணையிலும், பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போதும் நடிகர் சிங்கமுத்து கூறியதாவது: திருப்பத்தூர் அருகே கிராமத்தில் பிறந்த நான், 1969ம் ஆண்டு பி.யூ.சி., படித்தேன். கடந்த 1972ம் ஆண்டு சென்னை வந்த நான், காபி கடையில் வேலை பார்த்து, பின் அரிசி மண்டி வைத்தேன். சென்னையில் 1979ம் ஆண்டு முதல் நிரந்தரமாக தங்கினேன். அப்போது சினிமா உலகப் பழக்கம் ஏற்பட்டு, 1989ம் ஆண்டு, "மண்ணுக்குள் வைரம்' படத்தில் முதன்முதலாக நடித்தேன். முடிச்சூர் தாம்பரம் ரோட்டில் ராமச்சந்திரனின் மகன் பிரபு குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை வடிவேலு வாங்கினார். கடந்த 2003ம் ஆண்டு வடிவேலு வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இதனால் வடிவேலுவின் மேனேஜர் வேலுச்சாமி, நிலத்திற்கான பவர் பத்திரத்தை என் பெயரில் வாங்கிக் கொள்ளுமாறும், பிரச்னை முடிந்தவுடன் நிலத்தை வடிவேலு பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறினார். வடிவேலுவின் மேனேஜர்கள் முருகேசன், வேலுச்சாமி மரணத்தை அடுத்து, நான் வடிவேலுவிடமிருந்து விலகினேன். கடந்த 2008ம் ஆண்டு, கடைசியாக வடிவேலுவுடன் காத்தவராயன் படத்தில் நடித்தேன். வடிவேலு என் மீது போலீசில் கொலை மிரட்டல், மோசடி என பொய் புகார் கொடுத்தார். நிரபராதியான நான், கோர்ட் மற்றும் போலீஸ் மூலம் இவ்வழக்கை சந்திக்க நினைத்தேன்.
வடிவேலு புகார் கொடுத்த உடனே போலீசாரிடம் வர நினைத்தேன். வடிவேலு கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். இப்போது போலீசாரிடம் சென்றால், அவர்களது கடமையை செய்வர். எனவே முன்ஜாமீன் வாங்கிக் கொண்டு போலீசாரிடம் செல்லலாம் என எனது வக்கீல் தெரிவித்தார். அதன்படி, முன்ஜாமீன் பெற்று தற்போது போலீசாரிடம் வந்துள்ளேன். வடிவேலு, பணபலம் மற்றும் வசதி படைத்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த என்னைப் போன்ற சாதாரண நடிகனை கோர்ட்டும், போலீசாரும் தான் காப்பாற்ற முடியும். நிலத்தை விற்றது, வாங்கியது வடிவேலுவின் மேனேஜர் தான். நான் வெறும் காமெடி நடிகர். வடிவேலுவிடம் வரும் 10 - 15 காமெடி நடிகர்களைப் போல நானும் காமெடி ஸ்கிரிப்ட் எழுதித் தருவேன். வடிவேலு நிலத்தை யார் விற்றது என்றும், தாலுகா அலுவலகத்தில் நிலம் எங்கிருக்கிறது என்றும் விசாரிக்கட்டும்.
நான் சர்வேயர் அல்ல. இதற்கு நான் பொறுப்பல்ல. வடிவேலுவுடன் நான் சேரும் போது அவர் கோடீஸ்வரர் இல்லை. அவருடன் சேர்ந்து நடித்தால், அவரும் பிரபலமாவார், நமக்கும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து சேர்ந்தேன். பின், தனியாக பிரிந்து பெரிய வேடத்தில் நடித்தால் தான், நாம் முன்னேற முடியும் என பிரிந்து வந்தேன். தொழில் போட்டி தான் இப்புகாருக்கு காரணம். கோபப்படுவது தான் வடிவேலுவின் பழக்கம். இதுகுறித்து தயாரிப்பாளர்களிடம் விசாரித்தால் தெரியும். வடிவேலுவின் புகாரால், நான் பெரிதும் அவமானப்பட்டுள்ளேன். நடந்த சம்பவத்திற்கு வடிவேலு வருத்தம் தெரிவித்தால், அவருடன் சமாதானமாகப் போகவும், அவர் விரும்பினால் அவருடன் சேர்ந்து நடிக்கவும் தயாராகவுள்ளேன். இவ்வாறு சிங்கமுத்து கூறினார்.






