பெட்ரோல் விலையை எதிர்த்து பார்லியில் அமளி நிச்சயம் : எதிர்க்கட்சிகள் வியூகம் இன்று தெரியும்
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து பார்லிமென் டில் இன்று அமளி ஏற்படுத்தி புயலைக் கிளப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான கலால் மற்றும் சுங்கவரி உயர்த்தப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து, லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தன.
அன்றைய தினமே உயர்த்தப் பட்ட "பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது."பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு வாபஸ் பெறப் பட மாட்டாது' என, பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாக தெரிவித்து விட்டார். இந்நிலையில், நான்கு நாள் விடுமுறைக்கு பின், பார்லிமென்ட் இன்று மீண்டும் கூடுகிறது. இதில், அனைத்து எதிர்க் கட்சிகளும், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமளியை ஏற்படுத்தி பெரும் புயலைக் கிளப்ப திட்டமிட்டுள்ளன.
இடதுசாரி கட்சிகள், மதசார் பற்ற மற்ற கட்சிகளுடன் ஒருங் கிணைந்து, பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாக கூறியுள்ளன. பட்ஜெட் நாளன்று வெளிநடப்பில் ஈடுபட்ட பா.ஜ.,வுடன் லாலு, முலாயம் மற்றும் இடதுசாரித் தலைவர்கள் பங்கேற்றது தான் பெரிய அளவில் பேசப்பட காரணமாயிற்று.ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளும் பெட்ரோல் விலை உயர்வை கடுமையாக எதிர்த்து, பார்லிமென்டில் குரல் கொடுக் கப் போவதாக அறிவித்துள்ளன.இந்த விஷயத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என, அக்கட் சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இன்று ஆலோசனை: பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் இந்த விவகாரத்தை சாதாரணமாக கருதவில்லை. விலை உயர்வு விஷயத்தில் பார்லிமென்டில் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாளுவது என்பது குறித்து, தே.ஜ., கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று டில்லியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர்.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், "பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், ஐ.மு., கூட்டணியில் உள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இது தொடர்பாக ஐந்து கோடி பேரிடம் கையெழுத்து வாங் கும் பிரசாரமும் பா.ஜ., சார்பில் துவங்கப்படவுள்ளது' என்றார்.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, அடுத்த மாதம் 21ம் தேதி பார்லிமென்டை முற்றுகையிடப் போவதாகவும் டில்லி மாநில பா.ஜ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும் இன்று எதிர்க்கட்சிகளால் அமளி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அரசுக்கு ஆபத்து இல்லை : லோக்சபாவில், திரிணமுல் கட்சிக்கு 19 எம்.பி.,க்களும், தி.மு.க.,வுக்கு 18 எம்.பிக்களும் உள்ளனர். சபையின் மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கை 543. தற்போது, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி ஆதரவுடன் 323 எம்.பி.,க்கள் உள்ளனர். இன்று பார்லிமென்டில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் கட்சி முடிவு வெளிப்படையாக தெரியும். இருந்தாலும் ஆளும் கூட்டணிக்கு தனிப் பெரும் மெஜாரிட்டிக்கு பிரச்னை வராது.மத்திய மந்திரி மம்தா பானர்ஜி வெளிப்படையாக, "நாங்கள் சண்டை போட விரும்பவில்லை. நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தற்போது இருக்கிறோம், தொடர்ந்து இருப்போம்' என்றார். சென்னையில் கனிமொழி எம்.பி., கருத்துக் கூறுகையில், "கூட்டணி ஆட்சி என்றால் கருத்து வேறுபாடுகள் இருக் கும். அதற்காக அணி உடைந்து விடும் என்று அர்த்தமல்ல' என்றார்.






