கடைசி நிமிடத்தில் தென்கொரியா வெற்றி! * அர்ஜென்டினா பரிதாபம்
புதுடில்லி: உலக கோப்பை ஹாக்கி தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் தென் கொரிய அணி கடைசி நிமிடத்தில் "திரில்' வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது.
உலக கோப்பை ஹாக்கி தொடர் டில்லியில் நடக்கிறது. நேற்று "ஏ' பிரிவு லீக் போட்டியில், ஆசிய சாம்பியனான தென் கொரியா அணி ("நம்பர்-5'), பான் அமெரிக்கன் சாம்பியனான அர்ஜென்டினா அணியை ("நம்பர்-14') எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் இரு அணி வீரர்களும் முழுதிறமையை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதியின் முடிவில் 0-0 என்ற கணக்கில் போட்டி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட அர்ஜென்டினா அணியின் மரியோ அல்மடா, 53வது நிமிடத்தில் பீல்டு கோலடித்து 1-0 என முன்னிலை தந்தார். உடனடியாக சுதாரித்து கொண்ட தென் கொரியா அணிக்கு, லீ நாம் யங் 62வது நிமிடத்தில் கோலடித்து 1-1 என சமநிலை பெறச் செய்தார். தொடர்ந்து போராடிய தென் கொரியா அணிக்கு, 70வது நிமிடத்தில் "வீடியோ ரெபரல்' முறையில் "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய ஹயூன் வோ, சூப்பர் கோலடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ஆட்டநேர முடிவில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஜெர்மனி அபாரம்: முன்னதாக "ஏ' பிரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில், உலகின் "நம்பர்-1' அணியான ஜெர்மனி, கனடா ("நம்பர்-11' ) அணியை சந்தித்தது. தென் கொரியா அணிக்கு எதிரான முதல் போட்டியை, "டிரா' செய்த ஜெர்மனி அணி, நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி கண்ட கனடா அணியும் வெற்றியை நோக்கி விளையாடியது.
ஆட்டம் துவங்கியது முதல் ஜெர்மனியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பெஞ்சமின் வெஸ், "பீல்டு' கோலடித்து கணக்கை துவக்கி வைத்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஜெர்மனி அணிக்கு, 21வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை ஜான்-மார்கோ மான்டாக் கோலாக மாற்றி, 2-0 என முன்னிலை தந்தார். அடுத்த இரண்டு நிமிடத்தில் ஜெர்மனி கேப்டன் மேக்ஸிமில்லியன் முல்லர், "பெனால்டி கார்னர்' முறையில் கோலடித்து, 3-0 என வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த 5வது "பெனால்டி கார்னர்' வாய்ப்பை மார்டின் ஹானர் கோலாக மாற்ற, முதல் பாதியில் 4-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் துவக்கத்தில் இரு அணி வீரர்களும் கோலடிக்க முடியாமல் திணறினர். ஆட்டத்தின் கடைசி 12 நிமிடங்களில், ஜெர்மனியின் புளோரியன் (57வது, 63வது) இரண்டு கோலடித்தார். இதன்மூலம் ஆட்டநேர முடிவில் ஜெர்மனி அணி 6-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
----------------
நெதர்லாந்து அசத்தல்
உலககோப்பை ஹாக்கி தொடரின், நேற்றைய கடைசி லீக் போட்டியில், உலகின் "நம்பர்-4' அணியான நெதர்லாந்து அணி, நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
நேற்று நடந்த "ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில், முதல் நிமிடத்தில் நியூசிலாந்து கேப்டன் பிலிப் புர்ரோவ்ஸ், பீல்டு கோலடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2 வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ரொனால்டு புரோயர், பீல்டு கோலடிக்க 1-1 என போட்டி சமநிலை அடைந்தது. பின்னர் 8 வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை, நெதர்லாந்தின் டேகியமா கோலாக மாற்றி, 2-1 என முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து அசத்திய நெதர்லாந்து அணிக்கு 27வது நிமிடத்தில் ஜோரன் ஹெர்ட்பெர்ஜர், "ரிவர்ஸ் ஷாட்' மூலம் சூப்பர் கோலடித்தார். இதனால் முதல் பாதியில் நெதர்லாந்து 3-1 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை, இரு அணியினரும் கோட்டைவிட்டனர். ஆட்டநேர முடிவில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.






