நான்கு மாணவர்கள் இறந்த விவகாரம் சென்னை புலனாய்வு போலீஸ் விசாரணை
சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் இறந்த சம்பவம் குறித்து, சென்னை புலனாய்வுப் பிரிவு போலீஸ் அதிகாரி நேற்று விசாரணை நடத்தினார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் படித்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் கவுதம்குமார் கடந்த 28ம் தேதி விபத்தில் படுகாயமடைந்து இறந்தார்.
பல்கலை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என சக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்ததில், ஜார்க்கண்ட் மாநில மாணவர் சுமித்குமார், பீகார் மாணவர்கள் முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் ஆகியோர் பாலமான் வாய்க்காலில் மூழ்கி இறந்தனர்.
இதையடுத்து பல்கலைக்கழகத்திற்கு (மருத்துவம் தவிர்த்து) காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. விடுதி மாணவர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். ஆசிரியர்களுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது.பிரேத பரிசோதனைக்கு பிறகு, மாணவர்களின் நான்கு பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அண்ணாமலை பல்கலையில் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது. அவர் பயிற்சிக்காக டில்லி சென்றுள்ளதால், 5ம் தேதிக்கு பிறகு தான் விசாரணை துவங்கும் எனத் தெரிகிறது.இதற்கிடையே சென்னை வடக்கு மண்டல புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி., நாராயணசாமி நேற்று முன்தினம் இரவு முதல் சிதம்பரத்தில் தங்கி விசாரணை நடத்தி வருகிறார்.
வழக்கு குறித்து ஆலோசிக்க சென்னையில் இருந்து சட்ட வல்லுனர் ஒருவரை தமிழக அரசு அனுப்பியுள்ளது. அவர் சிதம்பரத்தில் முகாமிட்டு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.எப்போதும் பிசியாக இருக்கும் பல்கலை வளாகம், காலவரையற்ற விடுமுறை விடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே போலீசார் மட்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்கள்கணக்கெடுப்பு:அண்ணாமலை பல்கலையில் வட மாநில மாணவர்கள் நான்கு பேர் இறந்ததைத் தொடர்ந்து, மேலும் சில மாணவர்களை காணவில்லை என வதந்தி பரவி வருகிறது.இதையடுத்து பல்கலை தரப்பிலும், வருவாய்த் துறையினரும் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் பட்டியல் சரிபார்த்து வருவதுடன், மாணவர்கள் தங்கியுள்ள முத்தையா நகர், கே.ஆர்.எம். நகர், மாரியப்பா நகர், ஆட்டா நகர், சாந்தி நகர், சக்ரா நகர் மற்றும் சிதம்பரம் நகரில் உள்ள குடியிருப்புகள், காம்ப்ளக்ஸ், லாட்ஜ்களில் விவரம் சேகரித்து வருகின்றனர்.






