மத்திய கூட்டுறவு வங்கி பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்ப எதிர்பார்ப்பு
கடலூர்:மத்திய கூட்டுறவு வங்கிகளில் எழுத்து தேர்வு மூலம் பணியாளர்களை நியமிக்காமல், "இன்டர்வியூ' மூலம் தேர்வு செய்தால் முறைகேடு நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கிளை வங்கிகள் உள்ளன.
தற்போது அனைத்து வங்கிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. அப்படியிருந்தும், பழைய "லெட்ஜர்' முறையும் கையாளப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு தகுந்தாற்போல் போதுமான பணியாளர்கள் இன்றி வங்கிகள் இயங்குகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. உதாரணமாக, கடலூர் மாவட்டத்தில் 278 பணியாளர்களுக்கு 130 பேர் மட்டுமே உள்ளனர். இதன் காரணமாக, வங்கிப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
"அவுட் சோர்சிங்' முறையில் மாதம் 2,150 சம்பளத்திற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2008 நவம்பர் மாதம் அரசாணைப்படி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எழுத்து தேர்வு வைத்து, பதிவாளர் மூலம் நியமிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக, பணம்செலவின்றி தகுதியுடையவர்கள், அரசியல்வாதிகள் குறுக்கீடின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவ்வகை தேர்வினால், அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு எவ்வித ஆதாயமும் இல்லாமல் இருந்தது.இதை கருத்தில் கொண்டு தற்போது பணியாளர்கள் நியமனம் செய்வதில் பழைய அரசாணை முறையை மாற்றி 1:20 என்ற விகித்தில் பதிவாளர், இணை பதிவாளர்கள் மூலம், "இன்டர்வியூ' வைத்து தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
1:20 என்பதால் போட்டி அதிகரிக்கும். இதன் காரணமாக நியமனத்தில் முறைகேடுகள், ஒரு பணியிடத்திற்கு இவ்வளவு தொகை என வசூலிக்கும் நிலை ஏற்படும். எனவே, பழைய முறைப்படி எழுத்து தேர்வு வைத்து பணி நியமனம் செய்ய வேண்டுமென வங்கி அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.






