அன்னதான சாப்பாட்டிற்காக தினமும் ராமேஸ்வரம் சென்ற மதுரை வாலிபர்
மதுரை : ராமேஸ்வரம் கோயிலில் சாப்பிடுவதற்காகவே, தினமும் மதுரையில் இருந்து ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்த ஊனமுற்ற வாலிபரை, பெற்றோரிடம் ஒப்படைக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் முயற்சி மேற் கொண்டுள்ளது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் ரவிச்சந்திரன்(16). பிறந்த ஐந்தாவது மாதத்தில், போலியோவால் பாதிக்கப்பட்டு, இரு கைகளும், இடது காலும் ஊனமாயின. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், நண்பர்களுடன் சுற்றித்திரிந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்த்ததால், இவரை பெற்றோர் அடித்தனர். மனமுடைந்த ரவிச்சந்திரன், ரயில் ஏறி மதுரை வந்தார். பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் "கீ செயின்' விற்று வாழ்ந்தார். இரு மாதங்களுக்கு முன், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. வேறு தொழில் செய்ய முடியாத நிலையில், "வயிற்றுப் பிழைப்பிற்காக என்ன செய்வது' என, ரவிச்சந்திரன் குழப்பமடைந்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்திருந்த போது, ராமேஸ்வரம் கோயிலில் தினமும் அன்னதானம் வழங்குவதாக, சிலர் பேசியது, இவர் காதில் விழுந்தது. அன்றிரவே 12 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு ரயிலில் புறப்பட்டார். கோயிலில் காலை 11 மணிக்கு சுடச்சுட உணவு கிடைத்தது. மாலை 5.30 மணிக்கு மீண்டும் ரயிலில் ஏறி, மதுரை வந்தார். "இது நல்லா இருக்கே' என்றுக் கருதிய ரவிச்சந்திரன், டிக்கெட் எடுக்காமல், தினமும் இரவு ராமேஸ்வரத்திற்கு பயணிப்பதும், மறுநாள் மாலை மதுரை திரும்புவதும் வழக்கமாக கொண்டார். இவர் தினமும் ரயிலில் பயணிப்பதை பார்த்த, மதுரை செயின்ட் தாமஸ் ரூரல் டெவலப் மென்ட் டிரஸ்ட்டைச் சேர்ந்த சிவா, தனது ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து, ரவிச்சந்திரனை மீட்டு, தங்களது பொறுப்பில் வைத்துள்ள இவர்கள், பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.






