ராணுவ பெண் அதிகாரிக்கு ஒராண்டு சிறை; தண்டனை பெறுவதில் முதலிடம் பிடித்தார்
புதுடில்லி: இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்து லஞ்சம் பெற்ற பெண் அதிகாரிக்கு ராணுவ கோர்ட்டில் ஒராண்டு ஜெயில் தண்டைன விதிக்கப்பட்டது. ராணுவ கோர்ட்டில் தண்டனை பெற்றவர்களில் முதல் பெண் அதிகாரி என்ற பெருமை (! ) யையும் பெறுகிறார் இவர்.
படை மற்றும் பாதுகாப்பு துறையில் அதிகாரியாக இருந்தவர் மேஜர் டிம்பிள் சிங்லா. இவர் பணியில் இருந்த போது ஹவில்தார் சந்திரன் என்பவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் சந்திரனுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆவணங்கள் தயார் செய்து கொடுக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக பெற்றார். ராணுவ சட்ட பிரிவு 69, மற்றும் 63 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்படது. இது தொடர்பாக டிம்பிள் சிங்லா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கம் போல் கைது செய்யப்பட்டபோது உடல்நலக்குறைவு காரணம் காட்டி ஆஸ்பத்திரியில் ஓய்வு எடுத்துக்கொண்டார்.
இந்த வழக்கு 2007 முதல் ராணுவ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் (நேற்று இரவு) சிங்லாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அவர் பணியில் இருந்து முழுமையாக நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராணுவ துறையில் பணியாற்றி தண்டனை பெறும் முதல் பெண் அதிகாரி என பெயரெடுத்துள்ளார் சிங்லா. இவர் இந்த வழக்கில் அப்பீல் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.






