மதுரையில் ‘ஆந்திராக்ஸ்’ நோய் : மத்திய அரசு எச்சரிக்கை
மதுரை:"மதுரையில் கால்நடைகளுக்கு "ஆந்திராக்ஸ்' நோய் பரவ வாய்ப்புள்ளது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளதை தொடர்ந்து, நோய் தடுப்பு நடவடிக்கையில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஒவ்வொரு மாவட்டத்திலும் கால்நடைகளுக்கு எந்த வகையான நோய் அதிகமாக தாக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து எச்சரிப்பது வழக்கம். மதுரை மாவட்டத்தில் ஆய்வு செய்ததில், ஆந்திராக்ஸ், காணை நோய், ஆட்டுக்கொல்லி நோய் தாக்கக்கூடும் என கண்டறியப்பட்டது. இதுபோன்ற நோய்களை தடுக்க, மாநில அரசுடன் இணைந்து "ஆஸ்கார்டு' எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, அனைத்து கால்நடைகளுக்கும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
டாக்டர்கள் கூறியதாவது:இப்பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதால், மதுரையில் ஆந்திராக்ஸ் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பில்லை. அதேபோல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் ஏற்படுவதை தடுக்க, பிரத்யேக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது.தற்போது கோடை காரணமாக, கறவை மாடுகளில் பால் சுரப்பது குறைந்துள்ளது. உச்சி வெயிலில் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. அப்போது வெப்பக்கதிர்கள், உடலில் ஊடுருவும். இதனால் அதிகம் தீவனம் சாப்பிடாது. பால் சுரப்பது குறையும். மூச்சுத்திணறலும் ஏற்படும். பசுந்தீவனங்களை கொடுப்பதன் மூலம் பால் சுரப்பதை அதிகரிக்கலாம்.இதற்காக, பசுந்தீவனம் வளர்ச்சி திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு யூனியன்களிலும், 4 ஏக்கர் நிலத்தில் பசுந்தீவனம் வளர்க்கப்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் 5,000 ரூபாய் மத்திய அரசு மானியமாக தருகிறது என்றார்.






