செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா மாயம் : கடும் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு முடிவு
பெங்களூரு : நடிகையுடன் செக்ஸ் விவகாரத்தால், தலைமறைவாக உள்ள நித்யானந்தா சாமியார், வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார் என்று கூறப்படுகிறது. நித்யானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தலைமறைவாக உள்ளார் என்ற தகவல் பரவி வருவதால், பிடதி ஆசிரமத்தில், ராம் நகர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தா மீதும், அவர் ஆசிரமம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.
பெங்களூரு அருகே பிடதி என்ற ஊரில் நித்யானந்தரின் தலைமை அலுவலகம் உள்ளது.பிடதியிலுள்ள நித்யானந்தா தியான பீடத்தில் நேற்றும் பரபரப்பு காணப்பட்டது. சாமியார் பற்றி பலரும் ஆவலுடன் விசாரித்து வருகின்றனர். ஆனாலும், எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. தியானபீடத்திற்கு சென்று ராம் நகர் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தினார். அங்குள்ள சாமியாரின் சிஷ்யர்களிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் கலெக்டர் கூறுகையில், ""நித்யானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று தெரியாவிட்டால், அவரது ஆசிரம சொத்துகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். ஆசிரமத்தில் நேற்று முன்தினம் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, வளாகத்திலுள்ள குடிசைபோன்ற வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன. இதில், பல மர்மங்கள் நீடிப்பதாக சிலர் தெரிவித்தனர். ஆசிரமத்தில் உள்ளவர்களே தீ வைத்து எரித்ததாகவும், இதன் மூலம் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. தலைமறைவாக உள்ள நித்யானந்தா சாமியார், வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார் என்றும் கூறப்படுகிறது.சொத்துகளை முடக்க நடவடிக்கை: கர்நாடக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசுகையில், ""நித்யானந்தாவின் லீலைகள் வெளியாகியுள்ளன. காவி அணிந்து நடந்து கொண்டுள்ள விதம் ஆபாசமும், அசிங்கமும் ஆனது. அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு, சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறியதாவது: நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து வனத்துறை அதிகாரிகள், 26 கிலோ சந்தனக் கட்டைகளை கைப்பற்றியுள்ளனர். ஆசிரமத்தில் மான், புலி தோல்கள் உள்ளதாக வந்த தகவல் கிடைத்ததன் பேரில், போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று சோதனையிட்டனர். ஆனால், அத்தகைய பொருட்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. ஆசிரம சொத்தின் உரிமையாளர் குறித்து மாவட்ட கலெக்டரிடமிருந்து தகவல்கள் சேகரித்து, கூடுதல் நடவடிக்கை மேற் கொள்வோம். அவர் தலைமறைவாக இருப்பதுடன், அவர் எங்கிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. தமிழக போலீசாருடன் தொடர்பு கொண்டுள்ளோம். தேவையெனில், சட்டப்படி அவரது சொத்துகளை முடக்குவது உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.
கர்நாடகா மேலவையில் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் பேசியதாவது: பிடதியிலுள்ள நித்யானந்தா சொத்துகளை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து விரைவில் அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ளும். பிடதியிலுள்ள ஆசிரமம், பொதுமக்களின் சொத்தாக இருப்பதால், அதை எப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசு யோசித்து வருகிறது என்றார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நித்யானந்தா சாமியார் நடத்திய லீலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.







ஆன்மிகம் சொல்லை அழுக்காக்கிய இந்த நித்யனந்தாவுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்