உ . பி.,யில் கோயில் நெரிசல் ; 65 பேர் பலி ; இலவச உணவு- ஆடைகள் பெற வந்த போது பரிதாபம்
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் ராம் ஜானகி கோயிலில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. லக்னோ தென்கிழக்கு பகுதியில் உள்ளது பிரதாப்கார் மாவட்டம். இங்குள்ள குண்டா என்னும் நகரில் ராம்ஜானகி கோயில் உள்ளது.
விபத்து நடந்தது எப்படி ? : இங்கு வழக்கம்போல் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. விழாவில் பிறருக்கு இலவச உடை, உணவு வழங்குதல் வழக்கம். மதிய உணவு வழங்கப்பட தயார் ஆனது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் கோயில் நுழைவு வாசலில் முற்றுகையிட்டனர். கோயிலுக்குள் நுழைவதில் தள்ளு, முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாயிற்கதவு உடைந்து விழவும் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அங்கும் , இங்குமாக சிதறி ஓடினர். இதில் ஒருவர் மீது ஒருவர் விழ பலர் மயக்கமுற்றனர். பலர் மிதி பட்டு இறந்தனர்.
உயிர்ப்பலி அதிகரிக்கும் என அச்சம் : முதலில் 15 பேர் இறந்து விட்டதாகவும், பின்னர் சிறிது நேரத்தில் 50 பேர் இறந்து விட்டதாகவும் தகவல்ககள் தெரிவிக்கின்றன. தற்போது பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பலியானவர்கள் பலர் குழந்தைகள் : இது குறித்து அங்குள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ; காம்பவுண்ட் சுவரை அனைத்து பக்தர்களும் ஒரே நேரத்தில் குவிந்தததால் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர் . சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கோயில் திருவிழாவில் பக்தர்கள் பலர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






