அ.தி.மு.க.,விற்கு ஆதரவா? பா.ஜ., இன்று முடிவு
பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை எடுப்பதில், தமிழக பா.ஜ.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடக்கும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தி, முடிவெடுக்கப்படுகிறது. வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த போது அதை பா.ஜ., புறக்கணிப்பதாக அறிவித்தது. தமிழகத்தில் உட்கட்சித் தேர்தல் நடப்பதால், தேர்தலை புறக்கணிப்பதாக காரணம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தலையும் புறக்கணிப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ., மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். தேர்தல் புறக்கணிப்பிற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. கடந்த வாரம் சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த வெங்கய்யா நாயுடுவிடம், பென்னாகரம் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "இது மாநிலப் பிரச்னை. மாநிலத் தலைமைதான் முடிவு செய்யும்' எனக்கூறி அவர் நழுவினார். அவரது பேட்டியின் போது, முன்னாள் தலைவர் இல. கணேசனும், இந்நாள் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தும் அவர்கள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
இடைத்தேர்தல் குறித்து ஒசூரில், இல. கணேசன் பேட்டியளித்த போது, " பென்னாகரம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை நிறுத்த போவதில்லை. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கும், ஓட்டுக்காக இனத்தை முன் நிறுத்தி பிரசாரம் செய்பவர்களுக்கும் நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம். மக்கள் பிரச்னைகளை முன் நிறுத்தி, ஜனநாயக ரீதியில் மக்களை சந்திக்கும் கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து இன்னும் ஓரிரு நாளில் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பார்' எனத் தெரிவித்துள்ளார். தேர்தலைப் புறக்கணிப்பதற்கு பதிலாக, அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து பா.ஜ., நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், அவர்கள் ஆதரவு கேட்காத போது, எப்படி ஆதரவு தெரிவிப்பது என்ற தயக்கமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறும்போது, ""அ.தி.மு.க., ஆதரவு கேட்காத போது, நாங்களாக முன்வந்து ஆதரவு தர முடியாது. ஏற்கனவே, ஒரு இடைத்தேர்தலின்போது, இந்து முன்னணி அ.தி.மு.க.,விற்கு தன்னிச்சையாக ஆதரவு தெரிவித்தது. அது குறித்து, ஜெயலலிதா கூறும்போது, "நாங்கள் ஆதரவு கேட்கவில்லை' என்று தெரிவித்து விட்டார். ""அது போன்ற நிலை எங்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. அ.தி.மு.க., கூட்டணியில், கம்யூனிஸ்டுகள் உள்ள நிலையில், வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்,'' என்றார். அ.தி.மு.க.,விற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.






