எழுச்சி பெறுமா இந்திய அணி? *இன்று இங்கிலாந்துடன் மோதல்
புதுடில்லி: உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஸ்பெயினிடம் தோல்வி அடைந்த இந்திய அணி, இம்முறை எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டில்லியில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பின் ஆஸ்திரேலியா (2-5), ஸ்பெயினுக்கு (2-5) எதிரான போட்டிகளில் மோசமான தோல்வியடைந்தது. இதனால் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பு, தகர்ந்து விட்ட நிலையில் இன்று இந்திய அணி(12வது ரேங்க்), இங்கிலாந்தை(6வது ரேங்க்) எதிர்கொள்கிறது.
வருகிறார் சிவேந்திரா:
தடை காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் பங்கேற்காத, முன்னணி வீரர் சிவேந்திரா சிங், இன்று களமிறங்குவது இந்திய அணிக்கு பலம். தொடர்ந்து ஏமாற்றி வரும் அனுபவ வீரர் தீபக் தாகூர், இன்று நம்பிக்கை தரவேண்டும். ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் இருந்தும், முன்களத்தில் வீரர்கள் சரியாக செயல்படாததால் தோல்வியடைய நேரிட்டது. இந்த தவறுகளை இன்று திருத்திக்கொள்ள வேண்டும்.
தனது முதல் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த, "ஐரோப்பிய சாம்பியன்' இங்கிலாந்து அணி, "ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரில் அசத்தி வருகிறது. இன்று வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். நட்சத்திர வீரர் ரிச்சர்டு மான்டெல், வலது கையில் ஏற்பட்ட எழும்பு முறிவால், விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பின்னடைவு தான்.
இப்போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பிராசா கூறுகையில்,"" நமது தற்காப்பு பகுதியில் நல்ல முன்னேற்றம் தேவைப்படுகிறது. கடந்த இரு போட்டிகளில் விளையாடாத சிவேந்திர சிங், இன்று அணிக்கு திரும்புகிறார். ஐரோப்பிய தொடரில் இங்கிலாந்து அணியை தோற்கடித்துள்ளோம். இவர்களை மீண்டும் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கூடுதல் முயற்சி எடுத்து செயல்பட உள்ளோம்,'' என்றார்.
பாக்ஸ் செய்திகள்:
இரு அணிகள் இதுவரை...
இரு அணிகளும் இதற்கு முன் 23 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் இந்தியா 10, இங்கிலாந்து 7ல் வென்றுள்ளன. 6 போட்டிகள் "டிரா'வில் முடிந்துள்ளது. உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் 6 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் இந்தியா 3, இங்கிலாந்து 2 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் "டிரா' ஆனது.
அரையிறுதி வாய்ப்பு?
இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல, இன்று இங்கிலாந்தையும், அடுத்து தென் ஆப்ரிக்காவையும் அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதேநேரம் ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களது ஆட்டங்களில் தோற்க வேண்டும். தற்போதைய நிலையில் "பி' பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கே அரையிறுதி வாய்ப்பு அதிகமாக உள்ளது.






