ஆஸ்திரேலியாவில் இந்திய சிறுவன் கொலை : இந்தியர்கள் பீதி
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில், வீட்டிலிருந்து காணாமல் போன, இந்திய சிறுவனை கொலை செய்தவர்களை, அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் லலூர் பகுதியில் வசித்து வருபவர் ஹர்பிரீத் கவுர் சன்னா. இந்தியரான இவர், ஆஸ்திரேலியாவில் படித்து வருகிறார். இவரது மகன் குர்ஷன் சிங் கவுர்சன்னா(3). இவன் விடுமுறையில், தன் பெற்றோருடன் வசிக்க ஆஸ்திரேலியா வந்திருந்தான். இந்த வாரம் இறுதியில், இச்சிறுவன் இந்தியா திரும்புவதாக இருந்தது. இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை முதல், சிறுவன் குர்ஷன் கவுர்சன்னாவை காணவில்லை. சிறுவனின் தாய் ஹர்பிரீத் கவுர் உட்பட வீட்டில் இருந்த அனைவரும் சிறுவனை தேடியும், அவன் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறுவனின் தந்தை ஹர்ஜித் சிங்கின் உறவினரான, ராமன் தீப் சிங் என்பவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். நேற்று முன்தினம் மாலை, சிறுவன் குர்ஷன் கவுர்சன்னாவின் உடல், லலூர் பகுதியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள புல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டதாக, விக்டோரியா மாகாணப் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, விக்டோரியா மாகாணப் பிரதமர் ஜான் பிரம்பி கூறுகையில், "சிறுவன் கொல்லப் பட்டிருப்பது, நினைத்துப்பார்க்க முடியாத சோகம். இதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த, தேவையான அனைத்தையும் போலீசார் செய்வர்' என்றார். போலீஸ் துணை ஆணையர் கென் ஜோன்ஸ் மீடியாவில், நேற்று முன்தினம் இரவு அளித்த பேட்டி: தற்போதைய சூழ்நிலைகள் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது. இதை கொலையாகவே கருதுகிறோம். இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் உடல், ஊதா நிற ஜீன்ஸ் மற்றும் சாம்பல் நிற சட்டை அணிந்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணை நடத்துபவர்களுக்கு மீடியாக்கள், அமைதியான முறையில் ஒத்துழைப்பு அளித்து, விசாரணையை முழுமையாக பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும். இது கொலைக் குற்றமாக இருந்தால், குற்றவாளியை நீதியின் முன் நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் எடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார். ஆனால், சிறுவன் எவ்வாறு கொலை செய்யப் பட்டான் என்பது குறித்து, அவர் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.






