பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் மையத்தில் ‘தள்ளுமுள்ளு’
கோவை : பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் மையத்தில், திட்டமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால், மாணவ, மாணவியரிடையே "தள்ளுமுள்ளு' ஏற்பட்டது.பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் 23 முதல் நடைபெறுகின்றன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், கோவை புனித மைக்கேல் பள்ளியில் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்தது.
ஹால் டிக்கெட் வழங்க, பள்ளியில் ஏ,பி,சி,டி., என நான்கு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. பெயரின் முதல் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதன்படி ஹால் டிக்கெட் வழங்கப்படாததால், மாணவ, மாணவியரிடையே "தள்ளு முள்ளு' ஏற்பட்டது. மாணவர்களின் கூட்ட நெரிசலின் நடுவே சிக்கிக் கொண்டு, மாணவியர் தவித்தனர். மாணவியருடன் வந்திருந்த பெற்றோர், மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உக்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கூட்டத்தை ஒழுங்கு செய்தனர். பிரச்னை பற்றி தாமதமாக அறிந்த அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலக அலுவலர்கள் வரிசைப்படி ஹால்டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.
பெற்றோர் கூறுகையில், "ஹால் டிக்கெட் பெற இரண்டு நாட்களாக அலைந்து வருகிறோம். பிளஸ் 2 தேர்வு நடப்பதால் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை. நாளை (இன்று) கடைசி நாள் என்பதை வலியுறுத்தியபின் பிளஸ் 2 தேர்வு முடிந்தபின் ஹால் டிக்கெட் வழங்கினர்.ஹால் டிக்கெட் வழங்குவதற்கான ஏற்பாடுகளை முறைப்படுத்தாத கல்வித் துறைதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம். பிளஸ் 2 தேர்வு நடைபெறாத வேறு ஏதாவது பள்ளியில் ஹால் டிக்கெட் வழங்கி இருக்கலாம், என்றனர்.






