லாலு, முலாயம் தொடர்ந்து பிடிவாதம் : பெண்கள் மசோதாவை எதிர்க்க முடிவு
புதுடில்லி : பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா, பார்லிமென்டில் நாளை மறுதினம் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக இருந்தாலும், லாலு, முலாயம் போன்றவர்கள், அதை கடுமையாக எதிர்க்க தீர்மானித்துள்ளனர். தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என, முரண்டு பிடிக்கின்றனர்.
பெண்கள் தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாடப்படுவது 100வது சர்வதேச பெண்கள் தினம் என்பதால், லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, அன்றைய தினம் அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதுதொடர்பான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த பெண்கள் மசோதா ஏற்கனவே ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு, அது பின்னர் பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப் பட்டது. பரிசீலித்த நிலைக்குழுவும், மசோதாவை தற்போதைய நிலையிலேயே நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தது. அதனால், சமீபத்தில் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கனவுச் சட்டமான, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, நாளை மறுதினம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. பெண்கள் தினத்தன்று தாக்கல் செய்யப்படும் இந்த மசோதா, பெண்களுக்கான பரிசு என்பதால், அதை நிறைவேற்ற வேண்டும் என, எம்.பி.,க்களை காங்., தலைவர் சோனியா கேட்டுக் கொண்டு உள்ளார். எனவே, அனைத்து எம்.பி.,க்களும் வரும் திங்களன்று, தவறாமல் சபைக்கு வர வேண்டும் என, காங்., கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்து ள்ளது. எதிர்க்கட்சியான பா.ஜ.,வும், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தற்போதைய நிலையிலேயே நிறைவேற்ற ஆதரவு தெரிவிப்பதால், அதுவும் தங்களின் எம்.பி.,க்களுக்கு கொறடா உத்தரவிட்டுள்ளது. அதே நேரத் தில், பெண்களுக்கான இந்த ஒதுக்கீட்டில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கும், மற்றவர்களுக்கு உள் ஒதுக்கீடுவழங்க வேண்டும் என, லாலு, முலாயம் சிங் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அப்படி உள்ஒதுக்கீடு வழங்காமல் சட்ட மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர். வேறு சில கட்சிகளும் முரண்டு பிடிப்பதால், மசோதா தற்போதைய நிலையில் நிறைவேறுமா என்பது சந்தேகமே. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா, அரசியல் சட்டத் திருத்த மசோதா என்பதால், மொத்தமுள்ள எம்.பி.,க்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவு தேவை. லோக்சபாவில் மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை 545. இதில், காங்., பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை 348. ஆனால், 363 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை. மீதமுள்ள எம்.பி.,க்களின் ஆதரவை பெறுவது அரசுக்கு எளிதாகவே இருக்கலாம். இருந்தாலும், அதற்கு முன்னதாக ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றுவதுதான் பிரச்னையே. இந்த மசோதாவால் திங்களன்று பார்லிமென்ட் அமளி துமளியாகும் என்பதில் சந்தேகமில்லை.






