மின்சாரம் திருடியதாக குழந்தை மீது வழக்கு
கான்பூர் : மின்சாரம் திருடியதாக இரண்டரை வயது குழந்தை மீது, கான்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கான்பூரில் மின்சாரம் திருடப்படுவதாக வந்த புகாரையடுத்து, கான்பூர் மின் வினியோக நிறுவனம் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, எட்டு பேர் மீது கொடுத்த புகாரின் பேரில், எப்.ஐ.ஆர்., போடப்பட்டது. இவர்களில் இரண்டரை வயது குழந்தையான ஷா நவாசும் சேர்க்கப்பட்டான்.இந்த வழக்கு, பஜ்ரியா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை விசாரிப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கு போலீசார் சென்றபோது, ஷா நவாசை அவனது பாட்டி கையில் வைத்திருந்தார்.அவன் பெயர் பட்டியலில் இருப்பதைப் பார்த்து வியந்த போலீசார், உடனே, கான்பூர் மின் வினியோக நிறுவனத்தை தொடர்பு கொண்டு உண்மையை தெரிவித்தனர். மின் நிறுவனத்தினரும் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.






