போலீஸ் கட்டுப்பாட்டில் நித்யானந்தா ஆசிரமம்
பெங்களூரு : சாமியார் நித்யானந்தா, 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்திருந்த பிடதி ஆசிரமத்தை, போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆசிரமத்தில் தங்கிருந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.
தமிழகம், கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது இன்னமும் தெரியவில்லை. இரு மாநில போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மைசூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் அங்கு தேடினர்; அங்கு அவர் இல்லை.பெங்களுரு அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரம பீடத்திலுள்ள சீடர்களுக்கு, சாமியார் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு, ராம் நகர் மாவட்ட கலெக்டர் சிவசங்கர் நேற்று முன்தினம் மாலை வரை கெடு விதித்திருந்தார்.
ஆனால், சாமியார் எங்கு இருக்கிறார் என்று யாரும் தகவல் தெரிவிக்கவில்லை.கலெக்டர் விதித்த கெடு முடிந்ததால், அவரது உத்தரவின் பெயரில் பெங்களூரு - மைசூரு ரோட்டில் பிடதி நகரில், 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆசிரமத்தை, நேற்று காலை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஆசிரமத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதில் பெண்களும் அடங்குவர். அவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். அங்கு தங்கியிருந்தவர்கள், ஒருவர் பின் ஒருவராக ஆசிரமத்தை காலி செய்து வருகின்றனர்.ஆசிரமத்தில் வெளிநாட்டவர்கள் தங்குவதற்கு, ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய, "ஆனந்த நிவாஸ்' கட்டும் பணி நடந்து வந்தது. தற்போதைய பிரச்னையால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.






