வெளிநாட்டில் இனி கையேந்த வேண்டாம்: கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
திருநெல்வேலி : மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் நடந்த கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி மலைப்பகுதியில் இஸ்ரோ அமைப்பின் "திரவ திட்ட இயக்க மையம்' உள்ளது. ராக்கெட்டின் உந்து சக்தியாக விளங்கும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் சோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. இதுவரையிலும் ரஷ்யாவின் தொழில்நுட்பத்துடன் கூடிய கிரையோஜெனிக் இயந்திரங்களை இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது. தற்போது இந்திய தொழில்நுட்பத்தில் கிரையோஜெனிக் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பயன்படும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை செலுத்த எடை குறைந்த திரவ எரிபொருளில் இயங்கும் கிரையோஜெனிக் இயந்திரம் பயன்படுகிறது.
தகவல் தொடர்பு பரிமாற்றத்திற்கான ஜி-சாட் 4 செயற்கை கோள், ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட் மூலம் விரைவில் விண்ணில் செலுத்த முயற்சிகள் நடக்கிறது. இதில் பயன்படும் கிரையோஜெனிக் சோதனை இன்று மாலை மகேந்திரகிரி மையத்தில் நடந்தது. சோதனை நிகழ்வுக்கு இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளிமைய இயக்குநர் வீரராகவன், மகேந்திரகிரி மைய இணை இயக்குநர் முகமது முஸ்லிம், ஆசிர்பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலை 4 மணி முதல் 4.15 மணிவரையிலும் சோதனை நடந்தது. மகேந்திரகிரி மையத்திற்கு வெளியே பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். சோதனை முயற்சி என்னவானது என அதிகாரிகள் தெரிவிக்க முதலில் மறுத்தனர். பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் இரவு 7 மணிவாக்கில் பத்திரிகையாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இந்த சோதனை வெற்றி என தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கிரையோஜெனிக் இன்ஜின்150 வினாடிகளுக்கான சோதனை வெற்றிகரமாக நடந்தது. 500 பாராமீட்டர் அளவில் நடந்த சோதனையில் ஒரு இடத்தில் மட்டும் தடமாற்றம் ஏற்பட்டது. அண்மையில் ஸ்ரீஹரிகோட்டாவில் 200 வினாடிகளுக்கான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மகேந்திரகிரியிலும் அடுத்து 200 வினாடிக்கான சோதனை நடத்தப்படும் என தெரிவித்தார்.






