இந்திய அணிக்கு மீண்டும் “அடி’: அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது
புதுடில்லி: உலக கோப்பை ஹாக்கி தொடரின் மிக முக்கியமான லீக் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 2-3 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் கனவு தகர்ந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஸ்பெயினிடம் வீழ்ந்த இந்தியா, "ஹாட்ரிக்' தோல்வியை சந்தித்தது. வரிசையாக நான்கு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி (12 புள்ளி) அரையிறுதிக்கு ஜோராக முன்னேறியது.
டில்லியில் உள்ள தயான்சந்த் தேசிய மைதானத்தில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. நேற்று "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, "ஐரோப்பிய சாம்பியன்' இங்கிலாந்தை சந்தித்தது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. ஆட்டம் துவங்கியதில் இருந்தே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. 14வது நிமிடத்தில் சந்தீப் சிங்கின் "ஹாக்கி ஸ்டிக்' பட்டு இயான் மெக்கே காயமடைந்தார். இதிலிருந்து இங்கிலாந்து அணி விரைவாக மீண்டது. 16வது நிமிடத்தில் நிக் கேடலின் அடித்த பந்தை பெற்ற ஜேம்ஸ் டிண்டால், அப்படியே கோல் போஸ்டுக்குள் தள்ளி விட, இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 33வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' வாய்ப்பை இந்தியாவின் திவாகர் வீணாக்கினார். முதல் பாதி முடிவில் இங்கிலாந்தின் முன்னிலை நீடித்தது.
தற்காப்பு பலவீனம்:
இரண்டாவது பாதியின் துவக்கத்தில் இந்திய வீரர்கள் சொதப்பினர். முன்கள வீரர்கள் விரைவாக ஓடி கோல் அடிக்க முடியாமல் திணறினர். தற்காப்பு பகுதி வீரர்கள் படுமந்தமாக செயல்பட, இங்கிலாந்து அணியினர் மிக எளிதாக கோல் அடிக்க முன்னேறிச் சென்றனர். 42வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர் மூலம்' ஆஷ்லி ஜாக்சன் அருமையான கோல் அடித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா மீள்வதற்குள் 47வது நிமிடத்தில் ஆஷ்லி ஜாக்சன் இம்முறை "பீல்டு' கோல் அடிக்க, இங்கிலாந்து 3-0 என முன்னிலை பெற்றது.
போராட்டம் வீண்:
இதற்கு பின் இந்திய வீரர்கள் துணிச்சலாக போராடினர். 54வது நிமிடத்தில் குர்விந்தர் சிங் சாண்டி ஒரு "பீல்டு' கோல் அடித்தார். பின் 58வது நிமிடத்தில் கேப்டன் ராஜ்பால் சிங் ஒரு கோல் அடிக்க, போட்டியில் "டென்ஷன்' ஏற்பட்டது. இந்த நேரத்தில் முரட்டுத் தனமாக ஆடிய சர்தார் சிங்(66வது நிமிடம்), குர்பஜ் சிங்(69) ஆகியோர் "எல்லோ கார்டு' பெற்று வெளியேற, இந்தியா 9 பேருடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. கடைசி நிமிடத்தில் ராஜ்பால் சிங் கோல் வாய்ப்பை நழுவ விட, இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து, அரையிறுதி வாய்ப்பை கோட்டை விட்டது. உள்ளூர் சர்ச்சையில் சிக்கி தவிக்கும் தேசிய விளையாட்டான ஹாக்கி, சொந்த மண்ணிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். "பி' பிரிவில் இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
ஆஸி., முன்னிலை:
முன்னதாக "பி' பிரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் உலகின் "நம்பர்-2' அணியான ஆஸ்திரேலியா, பீஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்பெயினை சந்தித்தது. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் லூக் டோயர்னர், 20வது நிமிடத்தில் சூப்பர் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் ஸ்பெயின் திணறியது. முதல் பாதி முடிவில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றது.
"ஹாட்ரிக்' வெற்றி:
இரண்டாவது பாதியிலும் ஆஸ்திரேலியா கலக்கலாக ஆடியது. 60வது நிமிடத்தில் கிளன் டர்னர் ஒரு கோல் அடிக்க, 2-0 என முன்னிலை பெற்றது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி, ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. தவிர, 2008, பீஜிங் ஒலிம்பிக் அரையிறுதியில் ஸ்பெயினிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. இத்தொடரில் ஏற்கனவே இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகளை வென்ற ஆஸ்திரேலியா, தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது பாக்.,
நேற்று நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்காவை சந்தித்தது. இப்போட்டியில் பாகிஸ்தான்(7வது ரேங்க்) மிக எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப, ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் ரேஹன் பட் ஒரு "பீல்டு' கோல் அடிக்க, விரைவாக முன்னிலை பெற்றது. பின் ரேங்கிங் பட்டியலில் 13வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க அணி கடும் சவால் கொடுத்தது. இதையடுத்து பாகிஸ்தானால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
கோல் மழை:
இரண்டாவது பாதியில் தென் ஆப்ரிக்க வீரர்கள் மகத்தான எழுச்சி கண்டனர். அடுத்தடுத்து கோல் அடித்து பாகிஸ்தான் அணியை திணறடித்தனர். ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் கேரத், ஒரு கோல் அடித்தார். 42வது நிமிடத்தில் இயான் ஹாலி ஒரு கோல் அடித்தார். பின் டெய்ன் பேடன்(47வது நிமிடம்) மற்றும் மார்வின் ஹார்பர்(55) தலா ஒரு கோல் அடிக்க, தென் ஆப்ரிக்க அணி 4-1 என்ற முன்னிலை பெற்றது. போராடிய பாகிஸ்தானுக்கு கடைசி கட்டத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் இம்ரான்(68), அகமது(70) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்காவிடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. தென் ஆப்ரிக்க அணி தனது முதல் வெற்றியை பெற்றது.
லீக் சுற்றில் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியில் இருந்து மீளாத பாகிஸ்தான் அணிக்கு, இத்தொடர் படுமோசமானதாக அமைந்து விட்டது.






