வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றுகொடுமைப்படுத்திய ஏஜன்டுகள் 2 பேர் கைது
சென்னை:ஆந்திராவில் உள்ள முறுக்கு தொழிற்சாலையில் பணி செய்வதற்காக, எட்டு பேரை அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய வழக்கில் இரண்டு ஏஜன்டுகளை போலீசார் கைது செய்தனர்.மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த காரமணி, ஆந்திரா கம்மம் பகுதியில் முறுக்கு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், தனது தொழிற்சாலையில் பணிபுரிய ஆட்களை அழைத்து வருவதற்கு மதுரையைச் சேர்ந்த கருப்பு, திண்டுக்கல்லைச் சேர்ந்த சுகுமார் ஆகிய இருவரை ஏஜன்டுகளாக நியமித்திருந்தார்.காரமணியின் உறவினர் ஜெயச்சந்திரன், ஆட்களை அழைத்து வருவதற்கு இரண்டு ஏஜன்டுகளுக்கும் உதவினார்.
ஏழை பெற்றோரிடம் எளிதான வேலையும், நல்ல சம்பளமும் அளிக்கப்படும் எனக் கூறிய ஏஜன்டுகள், நான்கு சிறுவர்கள் உட்பட எட்டு பேரை முறுக்கு தொழிற்சாலை வேலைக்கு அழைத்துச் சென்றனர்.இதற்காக பெற்றோருக்கு 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஏஜன்டுகள் அட்வான்சாக வழங்கினர். ஆனால், காரமணியின் முறுக்கு தொழிற்சாலையில் காலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்யுமாறு கூறப்பட்டது. அங்கு பூட்டி வைக்கப்பட்டு, வேலையை முடிக்காதபோது அடித்ததுடன் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டனர்.
முறுக்கு தொழிற்சாலையில் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் எட்டு பேரில் ஏழு பேர் அங்கிருந்து தப்பித்தனர். கடந்த பிப்ரவரி 28ம் தேதி மாதவரத்தில் அவர்களை மீட்ட போலீசார், குழந்தைகள் நலக் கமிட்டியிடம் ஒப்படைத்தனர். அக்கமிட்டியின் தலைவர் மனோரமா கொடுத்த புகாரில், வழக்கு பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஏஜன்டுகள் கருப்பு, சுகுமார் இருவரையும் சென்னையில் கைது செய்தனர்.காரமணி உட்பட மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றுள்ளனர். இவ்வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






