கேபிள் குழி தோண்டும் பணியில் சிறுவர்கள்: பரமக்குடியில் நெஞ்சை உருக்கும் சோகம்
பரமக்குடி:பரமக்குடியில் தனியார் நிறுவனத்தின் கேபிள் பதிக்கும் பணிகளில்பெற்றோருடன் சிறுவர்களும் ஈடுபடுபடுவது பார்ப்போரை கலக்கமடைய செய்கிறது.பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில், வெளி மாவட்டத்தில் இருந்து பணி ஒப்பந்த அடிப்படையில் சில குடும்பங்கள் , கேபிள் பதிக்க குழி தோண்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளன. இவர்கள் தினம் வெயில், பனி என பாராமல் வேலைகளில் கண்ணும், கருத்துமாக செயல்படுகின்றனர்.
இதில், சோகம் என்னவென்றால் சிறு வயதினரையும் பணி செய்ய வைப்பது தான். இவர்கள் அனைவரும் 10 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட வர்களாக உள்ளனர்.மண் வெட்ட பயன்படுத்தப்படும் கடப்பாரை, மண் வெட்டி உயரம் கூட இல்லாத இவர்கள், அவர்களது உயரத்தையும் தாண்டி, தோண்டும் குழி இருப்பதால், மண் சரிவு போன்ற அசம்பாவிதங்களால் உயிரிழக்கும் அபாயம்உள்ளது. இந்த வேதனையை பார்க்கும் பலரும் , எதுவும் சொல்ல வழியின்றி மன வேதனையுடன் சாலையை கடக்கின்றனர்."இவர்களின் சோகத்தை, சோதனை செய்யாமல் சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவதை தடுக்க பணி ஒப்பந்ததாரர்கள் முன வர வேண்டும்,' என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட துறையினரும் இதன் மீது கவனம் செலுத்தலாமே.






