விரல்களின் நடனம்… ஏதென்ஸ் பயணம்!
வித்தக கலைஞனின் கையில் கிடைத்தால் விவிறகும் கூட வீணையாக மாறிவிடும் என்பார்கள். அப்படி ஒரு வித்தை தெரிந்த இசைக்கலைஞர் ஆர்தர் பிரதீப்(32). இவரது விரல்களின் நடனங்களுக்காக, "தபேலாக்கள்" மெய்ம்மறந்த மேடையாய் தவமிருக்கும்.
கோவை சிவானந்தா காலனிதான், ஆர்தருக்கு சொந்தஊர். இசை கூடும் திசையெல்லாம் விசையோடு ஒலிக்கும் இவரது தபேலா. துள்ளிக் குதித்து ஓடும் அருவி நீரின் சலசலப்பையும், ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் பேரோசையையும் தனது தபேலாவில் தவழவிடுவதில் ஜித்தர்.பொழுது போக்குக்காக இசையை கற்றுக்கொள்பவர்கள் மத்தியில், தனது பொழுதுகள் முழுவதையும் இசைக்காகவே செலவிடுகிற இளைஞர். இசைக் கல்லூரியில் முறையாக இசை பயின்று பட்டம் பெற்றிருக்கும் பிரதீப், ஒற்றை ஆளாக மேடையை ஆக்கிரமித்து ஊரையே திரும்ப வைத்து விடுவார்.
சமீபத்தில், வ.உ.சி. மைதானத்தில் நடந்த நேரு யுவகேந்திரா கிராமிய இளைஞர்கள் கலை விழாவில், தபேலாவில் அவர் உருட்டிய மிரட்டல், ஒரு போதும் மறக்காத அசத்தல். அதுதான், இப்போது தேசிய அளவிலான இசைப்போட்டியில் முதலிடம் பிடிக்க வைத்து, கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடக்கும் சர்வதேச கலை விழாவிற்கு அவரை அனுப்பி வைக்கவுள்ளது.டிரம்ஸ், மிருதங்கம், வயலின், சித்தார் என பல்வேறு இசைக்கருவிகளிலும் படம் போடும் ஆர்தர், தபேலாவில்தான் தன்னிகரற்ற மாஸ்டர். 16 வகையான தோல் கருவிகளின் சப்தங்களை தபேலா என்ற ஒற்றைக் கருவியில் துல்லியமாக வாசிப்பது இவரது ஸ்பெஷல்.எப்போது இவர் மேடையேறினாலும், இவருக்குப் பின்னாலேயே ரயிலும் மேடையேறி விடும். ரயில் புறப்படுவது, பாலத்தைக் கடப்பது, நிற்பது என ஒவ்வொரு கட்டத்தையும், தபேலாவிலும், வாய்ச்சப்தமுமாக இவர் ஒலி கிளப்பும்போதும், கண்ணை மூடிக்கொண்டால் மனதுக்குள் ரயில் ஓடும்.
இசைக்கருவிகளை நேரடியாக வாசிப்பதைப்போலவே, அந்த இசைக் கருவியின் ஒலியை தனது குரலிலும் "மிமிக்ரி' செய்து மிரட்டுவார். கார்ட்டூன் திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணிபுரிந்து வருகிறார். இதுவரை இவர் ஏறியிருக்கும் மேடைகளின் எண்ணிக்கை, 500க்கும் மேலே.இதையெல்லாம் விட பெரிய விஷயம், எங்கே மேடையேறினாலும் அதற்காக இவர் எந்தக்காசும் வாங்குவதில்லை என்பதுதான்; மாறாக மேடை ஏறும் இடங்களில் எல்லாம் எக்கச்சக்கமாக கை தட்டலை வாங்கிக்கொள்கிறார்.
""காசுக்காக மேடையேறுறது இல்லீங்க; நிறைய மேடையேறணும், மக்களை சந்தோஷப்படுத்தணும், அது மட்டும்தான் ஆசை. இப்பக்கூட, நான் நினைச்சே பார்க்கலை, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப் பாளர் வேல்முருகன் முயற்சி பண்ணி, ஏதென்ஸ்க்கு என்னைய அனுப்பி வைக் கிறாரு. கண்டிப்பா அங்கேயும் போய் அசத்தி, நம்ம நாட்டுக்குப் பேரு வாங்கிக் கொடுப்பேங்க,''நடனமாடும் விரல்களை நம்பிக்கையோடு உயர்த்திக்காட்டுகிறார் ஆர்தர். அசத்துங்க பாஸூ!






