தென் ஆப்ரிக்காவை வீழ்த்துமா இந்தியா? *உலக கோப்பை ஹாக்கியில் எதிர்பார்ப்பு
புதுடில்லி: தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் இந்திய அணி, இன்று தென் ஆப்ரிக்காவை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானை வீழ்த்திய உற்சாகத்தில் இருக்கும் தென் ஆப்ரிக்க அணி, அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காது என நம்பலாம்.
டில்லியில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. "பி' பிரிவில் இருந்து இங்கிலாந்து, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. ஆஸ்திரேலிய அணியும் ஏறக்குறைய அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் தரவரிசையில் 12வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை (13வது ரேங்க்) சந்திக்கிறது.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரி பாகிஸ்தானை மட்டும் வென்றது. அடுத்து நடந்த ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்து ஏமாற்றியது. இன்று தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான வெற்றி, ஹாக்கி ரசிகர்களை திருப்திபடுத்த மட்டுமல்ல, 7 அல்லது 8 வது இடத்துக்கான மோதலுக்கு இந்த வெற்றி முக்கியம். கடந்த 2006 உலக கோப்பை தொடரில் 11 வது இடம் பெற்ற இந்திய அணிக்கு, இது நல்ல முன்னேற்றமாக இருக்கும்.
முன்னேற்றம் இல்லை:
ஆனால் கடந்த போட்டிகளில் அடைந்த தோல்விகளில் இருந்து இந்திய வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. பந்துகளை சரியாக சக வீரர்களுக்கு தராதது, களத்தில் துடிப்புடன் செயல்படாதது மற்றும் தற்காப்பு பகுதியிலும் மோசமாக விளையாடுவது என தொடர்ந்து சொதப்புகின்றனர். இதை திருத்திக்கொள்ளாத பட்சத்தில், தென்ஆப்ரிக்கா அணி தரும் அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும்.
கேப்டன் ஆறுதல்:
"பெனால்டி கார்னரை' கோலாக மாற்றுவதில் சந்தீப் சிங், தனஞ்செய் மகாதிக் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள். ஆனால் கேப்டன் ராஜ்பால் சிங், குர்பாஜ் சிங், அர்ஜுன் ஹாலப்பா ஆகியோர் ஆறுதல் தருகிறார்கள். மறுமுனையில் "ஹாட்ரிக்' தோல்விக்கு பின், பாகிஸ்தானை வீழ்த்தி முதல் உலக கோப்பை வெற்றியை ருசித்த உற்சாகத்தில் தென் ஆப்ரிக்கா உள்ளது. இது இன்றைய போட்டியில் சாதிக்க இந்த அணிக்கு துணையாக இருக்கும்.
வீரர்களுக்கு ஆதரவு:
போட்டிகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பிராசா கூறுகையில்,"" ஒவ்வொரு போட்டிக்கும் இந்திய வீரர்கள் தங்களை முன்னெற்றி கொண்டு சிறப்பாக விளையாடுகிறார்கள். பொதுவாக நாங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். தென் ஆப்ரிக்க அணி சிறந்த அணி தான். அவர்கள் பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினுக்கு எதிரான நன்கு விளையாடினர்,'' என்றார்.
ஸ்பெயினுக்கு வாய்ப்பு?
இன்று "பி' பிரிவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின், இங்கிலாந்தை சந்திக்கிறது. இதில் ஸ்பெயின் அணி இமாலய வெற்றி பெற வேண்டும். அதேநேரம் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியடையும் பட்சத்தில் ஸ்பெயினுக்கு அரையிறுதி வாய்ப்பு ஏற்படும்.
இரு அணிகள் இதுவரை...
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் இதுவரை <உலக கோப்பை தொடரில் மூன்று முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி ஒரு போட்டியில் வென்றுள்ளது. இரண்டு ஆட்டங்கள் "டிராவில்' முடிந்துள்ளது.






