தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்மூவர் பலி: குடிசை மீது கவிழ்ந்தது கிரஷர் தூள் லாரி
பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை அருகே கிரஷர் தூள் லோடு கொட்டியபோது, குடிசை மீது லாரி கவிழ்ந்த விபத்தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:பழவந்தாங்கல், ஐயப்பா நகரை சேர்ந்தவர் உதயன். கோவிலம்பாக்கம், விடுதலை நகரில் இவருக்கு சொந்தமான ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 14 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில், பீகார் மாநிலம், ஜமுயி மாவட்டம், பேலா கிராமத்தை சேர்ந்த அஜித் (35) தயானந்த் (25) பிரகாஷ் (20) லல்லுகுமார் யாதவ் (24) சுரேஷ் யாதவ் (32) ஜெயராம் (35) ஆகிய ஆறு பேர், கடந்த பல மாதங்களாக இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து குடியிருந்து, ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை இவர்கள் குடிசையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதற்கு, லாரியில் கிரஷர் தூள் கொண்டுவரப்பட்டு குடிசை அருகே கொட்டப்பட்டது. ஏற்கனவே, இரண்டு லோடு கொட்டிய இடத்தில் காலை 7 மணிக்கு கொண்டுவரப்பட்ட மூன்றாவது லோடையும் கொட்ட முயன்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக லாரி அருகேயிருந்த குடிசை வீடு மீது கவிழ்ந்தது. கிரஷர் தூளும் குடிசை மீது கொட்டியது.இதில், குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த அஜித், தயானந்த், பிரகாஷ் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். லல்லுகுமார் யாதவ் காயமடைந்தார்.
தகவலறிந்த போலீசாரும், தாம்பரம் தீயணைப்பு படை வீரர்களும் பல மணி நேரம் போராடி, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த லல்லுகுமார் யாதவை கீழ்கட்டளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஒரே நேரத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.






