பென்னாகரத்தில் மது விற்பனை: 50 சதவீதம் அதிகரிப்பு சதவீதம்
தர்மபுரி;பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பால், தொகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் 50 சதம் விற்பனை அதிகரித்துள்ளது.தேர்தல் என்றாலே அரசியல் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடும். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசியல் கட்சியினர், அடிமட்டத்தில் உள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மது வாங்கி கொடுப்பது வழக்கம். அந்த நடைமுறை, இந்த தேர்தலில் சற்று அதிகமாகவே நடந்து வருகிறது."குவார்ட்டரும், பிரியாணியும் கொடுத்தால் மட்டுமே தேர்தல் பணி முழு மூச்சில் நடக்கும்' என்பதால், தேர்தலில் போட்டியிடுவோரும், அதை பெரும் செலவாக நினைப்பதில்லை. அதனால், பகல் நேரங்களில் கட்சி நிர்வாகிகளிடம் பணம் பெறும் தொண்டர்கள், நேராக டாஸ்மாக் கடைகளுக்கு சென்று "சரக்கு' குடித்த பின், தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுகின்றனர்.
பென்னாகரம் தொகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில், காலை கடை திறந்தவுடன் விற்பனை அமோகமாக துவங்கி விடுகிறது. முந்தைய மாதங்களைக் காட்டிலும், இப்போதெல்லாம் பென்னாகரம் கடைகளில் 50 சதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. வெயில் அதிகம் என்பதால், பீர் விற்பனை தாறுமாறாக எகிறியுள்ளது.
பாப்பாரப்பட்டி மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதுக்கடைகளில் இரவு நேரங்களில் கட்சி கரை வேட்டி கட்டியவர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
எனினும், டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைந்த பார் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது. பல கடைகளில், பார் இல்லாததால் வெளியில் தள்ளுவண்டிகளில் ஸ்நாக்ஸ் அயிட்டங்களை விற்கின்றனர். பார் வசதியில்லாததால், டாஸ்மாக் கடைகளை சுற்றிலும் பெட்டிக் கடைகளின் எண்ணிக்கையும் அதிகம் பெருகியுள்ளது.இந்த கடைகளிலும் பரபரப்பான விற்பனை நடப்பதோடு, அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் தொண்டர்கள், அலட்டிக் கொள்ளாமல் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு, மறைவான இடத்தில் "உற்சாகம்' ஏற்றிக் கொண்டு புறப்படுகின்றனர்.
டாஸ்மாக் கடைகளையொட்டியுள்ள பெட்டிக் கடைகளில் தண்ணீர் பாக்கெட் இரண்டு முதல் மூன்று ரூபாய்க்கும், ஸ்நாக்ஸ் பொட்டலங்கள் நான்கு முதல் ஐந்து ரூபாய்க்கும், கிளாஸ் இரண்டு முதல் மூன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தொகுதியில் 50 சதத்துக்கும் மேல், டாஸ்மாக் மது விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பார் வசதியில்லாததால் அரசுக்கு தினம் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பாட்டில்கள் மூலம் கிடைக்கும் வருவாயும் போய் விட்டது.






