சாம்பலானது தனியார் மில் : ரூ.5 கோடி நூல், பஞ்சு நாசம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே, தனியார் மில்லில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான நூல், பஞ்சு எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள், 11 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.
மேட்டுப்பாளையம் - பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில், "டெரி டவல்' உற்பத்தி செய்யும் தனியார் மில் உள்ளது. இங்கு 1,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மில்லில் உற்பத்தி செய்யப்படும் டவல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. டவல் தயாரிக்க தேவையான பஞ்சு மற்றும் நூல் பேல்கள் ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொள்முதல் செய்த மில் நிர்வாகம், கிடங்கில் அடுக்கி வைத்திருந்தது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பஞ்சு கிடங்கிலிருந்து புகை கிளம்பியது. உடனடியாக, மில் நிர்வாகத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் வாட்ச்மேன் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவி, கிடங்கு முழுவதும் பற்றி எரியத் துவங்கியது.
கட்டடத்தின் மேல்கூரை சிமென்ட் சீட்டால் போடப்பட்டதால், அவை வெடித்து சிதறின. அனல் வெப்பம் தாங்காமல் குடோன் சுவர்கள் இடிந்து விழுந்தன. கிடங்கில் அடுக்கி வைத்திருந்த அனைத்து, "பஞ்சுபேல்' களும் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை துணை இயக்குனர் ஜெயகாந்தன் தலைமையில், கோட்ட தீயணைப்பு துறை அலுவலர் லூர்துநாதன், உதவி கோட்ட அலுவலர் பிரதீப்குமார் உள்ளிட்ட 50 வீரர்கள், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்களுக்கு தேவையான தண்ணீர், தனியார் லாரிகள் மூலம் மில்லில் இருந்து சப்ளை செய்யப்பட்டது.
மில்லில் தீ கொழுந்து விட்டு எரிந்தது, சுற்றுவட்டார பகுதிகளில் 2 கி.மீ., தூரத்துக்கு தெரிந்தது. அதிகாலை 2.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து, நேற்று பகல் 1.00 மணி வரை தொடர்ந்தது. தீயணைப்பு வீரர்கள், 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தனியார் மில் பொது மேலாளர் ஜெயராஜ் கூறுகையில், ""ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து 20 ஆயிரம் பேல் ஸ்பின்னிங் நூல், 10 ஆயிரம் பேல் பஞ்சு ஆகியவற்றை கொள்முதல் செய்து கிடங்கில் இருப்பு வைத்திருந்தோம். தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என தெரியவில்லை,'' என்றார்.






