வைகைநல்லூரில் எடுக்கப்பட்ட பழங்கால நாணயங்கள் சிறப்பு கண்காட்சி
சென்னை : சென்னை அரசு அருங்காட்சியகம் சார்பில், "வெள்ளி முத்திரை' பதிக்கப்பட்ட சிறப்பு நாணய கண்காட்சி நேற்று துவங்கியது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் கரூர் மாவட்டம், குளித்தலை, வைகைநல்லூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது நிலத்தை தோண்டிய பொழுது, நிலத்தடியில் ஒரு பானையில் பழங்கால நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நாணயங்கள் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின், கடந்தாண்டு இறுதியில் இந்த நாணயங்கள், சென்னை அருங்காட்சியகத்தில் ஆய்வுக்காக வழங்கப்பட்டது. அருங்காட்சியகங்கள் கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில், காப்பாட்சியர் சுந்தரராஜன் மற்றும் குழுவினர் அந்த நாணயங்களை சுத்தம் செய்து, நாணயங்கள் எந்த காலத்தைச் சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதன் விவரங்களை, தற்போது அருங்காட்சியக அரங்கில் வரலாற்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கண்காட்சி வைத்துள்ளனர். இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை, அருங்காட்சியக முன்னாள் இயக்குனர் ஹரி நாராயணா துவக்கி வைத்தார்.
கண்காட்சி துவக்க விழாவில் அருங்காட்சியகங்கள் கமிஷனர் ஸ்ரீதர் பேசியதாவது: இந்த அருங்காட்சியகம் 19ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டதும் மிகவும் பழமையானதுமாகும். இந்த அருங்காட்சியகம் சார்பில் கல்வி தொடர்பான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வந்து பயன் பெறுகின்றனர். இங்கு, 1976ம் ஆண்டு நாணயங்கள் பிரிவு துவக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கும் பழங்கால நாணயங்கள் தற்போது இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நாணயங்கள் பிரிவு துவக்கப்பட்ட போது, குறைவான நாணயங்களே இங்கு இருந்தன. தற்போது, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ரோம நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் என பல்வேறு நாணயங்கள் இதில் அடங்கும். தற்போது கரூர் மாவட்டம், வைகைநல்லூர் கிராமத்தில் கிடைக்கப் பெற்ற 373 வெள்ளி முத்திரை பதித்த நாணயங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் மூலம் அக்காலத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவின் வடபகுதி இடையே இருந்த வர்த்தக உறவு, வரலாறு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஸ்ரீதர் பேசினார்.
நாணயங்கள் குறித்து காப்பாட்சியர் சுந்தரராஜன் கூறியதாவது: நாணயங்கள் உருக்கி வார்த்தல், அச்சுப் பதித்தல் மற்றும் முத்திரை குத்துதல் என்ற மூன்று பிரிவாக உருவாக்கப்பட்டன. அச்சுப் பதித்தல் முறை தான் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைகைநல்லூரில் கிடைத்துள்ள முத்திரை குத்தப்பட்ட வெள்ளி நாணயங்களில், ஒவ்வொன்றும் விதவிதமான முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ன. இதற்கென தனியான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எடைக்கு தக்க வகையில் ஓரங்கள் வெட்டப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 373 நாணயங்களில் 372 நாணயங்கள் தலா 3லிருந்து 3.5 கிராம் எடை அல்லது 32 குன்றிமணி எடை கொண்டவையாக உள்ளன. ஒரே ஒரு நாணயம் மட்டும் 1.29 கிராம் எடை கொண்டதாக உள்ளது.
இதில், 372 நாணயங்களும் ஒரு, "கர்ஷப்பணம்' என்றும், எடை குறைந்த ஒரு நாணயம், "அரை கர்ஷப்பணம்' என்றும் அக்காலத்தில் அழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த நாணயங்கள் அனைத்தும் கி.மு., 4ம் நூற்றாண்டில் மவுரியர் ஆட்சிக் காலத்தில் புழக்கத்தில் இருந்தவை. பொதுவாக வெள்ளி முத்திரை நாணயங்கள் இந்தியாவின் வடபகுதியில் கி.மு., 6ம் நூற்றாண்டு முதல் கி.பி., முதல் நூற்றாண்டு வரையிலும், தென்பகுதியில் கி.பி., 2ம் நூற்றாண்டு வரையிலும் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நாணயங்கள் கிடைத்ததன் மூலம் சங்க காலத் தமிழர்கள், மகத நாட்டுடன் நெருங்கிய வர்த்தக தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
இந்த நாணயங்களில் உள்ள முதன்மை முத்திரைகள் அனைத்தும் ஒரே மாதிரியும், இரண்டாம் நிலை முத்திரைகள் அனைத்தும் வித்தியாசமானவையாகவும் உள்ளன. அவை, அக்காலத்தில் இருந்த 16 ராஜ்யங்களை விளக்குபவையாக அமைந்துள்ளன. இது தொடர்பாக இன்னும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு சுந்தரராஜன் கூறினார். கண்காட்சி துவக்க நிகழ்வில், சென்னை நாணயவியல் சங்கத் தலைவர் வைத்தியநாதன், காப்பாட்சியர்கள், கல்வெட்டு ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






