2 வது நாளாக பார்லி., அவைகள் ஒத்திவைப்பு : மசோதாவை கிழித்த 7 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் ; அன்சாரி உத்தரவு
புதுடில்லி : இன்று ( செவ்வாய்கிழமை ) காலையில் பார்லி., இரு அவைகள் கூடியதும் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து லோக்சபா , ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்ய சபாவில் நேற்று பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நகலை கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்ட 7 எம்.பி.,க்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஓட்டெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், மசோதா நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இன்று பலத்த கோஷத்திலும் கேள்வி நேரம் : இன்று ( 9ம் தேதி ) சபை 11 மணிக்கு கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., க்க்கள் கோஷம் எழுப்பினர்.. ஆனாலும் சபாநாயகர் மீரகுமார் பொருட்படுத்தாமல் கேள்வி நேரத்தை நடத்தினார். தொடர்ந்து 11. 30 மணி அளவில் 10 நிமிடம் சபையை ஒத்தி வைத்து தொடர்ந்து 11. 30 க்கு சபை துவங்கியது. இப்போதும் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் லோக்சபாவை 12 மணி வரை ஒத்தி வைத்தார். தொடர்ந்து 2 மணிக்கு சபை கூடியது. தொடர்ந்து 4 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இது போல் ராஜ்ய சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக சபையில் சிலி நில நடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் - ஜனாதிபதியுடன் லாலு சந்திப்பு : இதற்கிடையில் இந்த விகாரம் தொடர்பாக ராஷட்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் இந்த இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம் என்றார் லாலு. முலாயம்சிங் யாதவ் , சரத் யாதவ்வும் பிரதமரை சந்தித்து பேசினர்.
முலாயம் சிங் சொல்கிறார் : இது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறுகையில் ; நாங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரானவர்கள் அல்ல. தற்போது உள்ள நிலையில் இருந்தால் ஏற்க முடியாது. இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நோக்கம். அனைத்து பிரிவினருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டால் தான் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
சஸ்பெண்ட் உத்தரவு : நேற்றைய சபையில் அமளியில் ஈடுபட்டு மசோதாவை கிழித்து எறிந்த எம்.பி.,க்க்ள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் ராஜ்யசபை அவைத்தலைவர் அமீது அன்சாரி. சபையில் நாகரிமாகவும், இடையூறு செய்யும் விதமாகவும் ஈடுபட்ட நந்தகிஷோர் யாதவ், சுபாஷ் யாதவ், வீர் பால் சிங் யாதவ், இஜாஸ் அலி, கமல் அக்தார், அமீர் ஆலம்கான் , சபீர் அலி உள்ளிட்ட 7 பேரை சஸ்பெண்ட் செய்வதாக சபையில் அறிவித்தார் அவைத்தலைவர் அனசாரி . இதற்கும் கடும் எதிர்ப்பு கோஷம் எழுந்தது. எம்.பி.,க்கள் அனைவரும் ராஷ்டிரிய ஜனதா தள் மற்றும் சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். சபை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 2 மணிக்கு கூடி பி்ன்னர் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
திங்கட்கிழமை ( நேற்று) சபை நடவடிக்கை விவரம் : ராஜ்ய சபா நேற்று காலை 11 மணிக்கு துவங்கியதும், சில விவகாரங்களை உறுப்பினர்கள் எழுப்பியதால், கூச்சல், குழப்பம் நிலவியது. உடன், 12 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடிய போதும், இதே நிலை நீடித்ததால், மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இரு முறை ஒத்தி வைக்கப்பட்டு, மதியம் 2 மணிக்கு கூடிய போது, சபைத் தலைவர் அன்சாரி இருக்கையில் வந்தமர்ந்தார். அவர் வந்த சில வினாடிகளில், எம்.பி.,க்கள் புடைசூழ சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி வந்து அமர்ந்தார்.
ராஜ்ய சபாவில் ரகளை:பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யும்படி அமைச்சர் வீரப்ப மொய்லியை அன்சாரி அழைத்தார். அவரும் மசோதாவை தாக்கல் செய்தார். உடன், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி எம்.பி.,க்கள் இருக்கையை விட்டு எழுந்து, திபு திபுவென சபைத் தலைவர் அருகே ஓடினர். மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பிய அவர்கள், இருபுறமும் இருக்கும் படிகளில் ஏறி, அன்சாரியை நெருங்கினர்.அவர் முன் இருந்த நான்கு மைக்குகளில் இரண்டு மைக்குகளை பிடுங்கி எறிந்தனர். சமாஜ்வாடியைச் சேர்ந்த எம்.பி., கமல் அக்தர், ராஜ்ய சபா அதிகாரிகள் அமர்ந்திருக்கும் மேஜைக்கு மேல் ஏறி, பேப்பர்களை கிழித்து எறிந்து நடனமாடினார்.இதைப் பார்த்த சபை, அதிர்ச்சியில் உறைந்தது. அன்சாரியின் இரு பக்கமும் மற்ற எம்.பி.,க்கள் ஏறி, அவரின் மேஜை மீதிருந்த பேப்பர், பென்சில் ஸ்டாண்டு, கடிகாரத்தை தூக்கி வீசினர். அது மட்டுமின்றி, அன்சாரி கையிலிருந்த பேப்பர்களை பறிக்கப் பார்த்ததும், அவர் கடுப்பானார். கோபத்துடன் இருக்கையை விட்டு எழுந்து சென்றார். அத்துடன் சபை 4 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இடைப்பட்ட நேரத்தில், உடைந்த மைக்குகள் அகற்றப்பட்டு, புதிய மைக்குகள் மாற்றப்பட்டன. மீண்டும் சபை கூடிய போது, பாதுகாப்புக்காக மார்ஷல்கள் நிறைய பேர் நிறுத்தப்பட்டனர். சபை முழுவதும் ஒரே டென்ஷனாக இருந்ததால், சபைத் தலைவர் இருக்கைக்கு வந்து அமர்ந்த குரியன், சபையை மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார். அதன் பின், மறுபடியும் சபை கூடிய போது மாலை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்சபாவிலும் அமளி:லோக்சபாவிலும், சபை கூடியதுமே, பெண்கள் மசோதாவுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூச்சல், குழப்பத்துக்கு இடையே 10 நிமிடம் கேள்வி நேரம் நடைபெற்றது. அதன் பின், தொடர முடியாமல் சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு கூடிய போது, முலாயம், லாலு பிரசாத் இருவரும் சபையின் மையப் பகுதிக்கு வந்து, "எப்படி பெண்கள் மசோதாவை நிறைவேற்றுகிறீர்கள்' என கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால், அமளியாகி சபை, நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது. பெண்கள் மசோதா விவகாரத்தில், இரு சபைகளிலும் நேற்று அமளி நிலவியதால், மசோதா மீதான ஓட்டெடுப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் என தெரிகிறது. பெரும்பாலான கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், முலாயம், லாலு கட்சியினர் எதிர்ப்பதால், மசோதா நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.அத்துடன் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் வாபஸ் பெற்றுள்ளன. சமாஜ்வாடி கட்சிக்கு 21 எம்.பி.,க்களும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு நான்கு எம்.பி.,க்களும் உள்ளனர்.
லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், ""இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுகிறது. இது, அரசியல் கொள்ளை; இதை நாங்கள் பொறுக்க மாட்டோம். எனவே, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்,'' என்றார்.முலாயம் சிங் கூறுகையில், ""முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்களுக்கு எதிராக காங்கிரஸ் - பா.ஜ., உள்ளன. இந்த இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவர்கள் விரும்பவில்லை; அதை தற்போது நிரூபித்துள்ளனர்,'' என்றார்.
ஐ.மு., கூட்டணியில் காங்கிரசுக்கு 208, திரிணமுல் காங்கிரசுக்கு 19, தி.மு.க.,விற்கு 18, தேசியவாத காங்கிரசுக்கு ஒன்பது, தேசிய மாநாட்டு கட்சிக்கு மூன்று என, மொத்தம் 257 எம்.பி.,க்கள் உள்ளனர். அதனால், முலாயம், லாலு தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றாலும், அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. வெளியில் இருந்து ஆதரவளிக்கும் வேறு சில எம்.பி.,க்களால் மத்திய அரசு, 272 என்ற பெரும்பான்மையை பெற்று விடும்.






