இந்தியாவின் செல்வாக்குமிக்க வீரர் சச்சின்
மும்பை: இந்திய விளையாட்டு அரங்கில் மிகுந்த செல்வாக்குமிக்க வீரராக "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தேர்வு செய்யப்பட்டார். "ஒலிம்பிக் தங்கமகன்' அபினவ் பிந்த்ரா, "டென்னிஸ் புயல்' சானியா மிர்சா ஆகியோரும் "டாப்-50' பட்டியலில் இடம் பெற்றனர்.
பிரபல "ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட்' பத்திரிகை, விளையாட்டு அரங்கில் சக்தி வாய்ந்த "டாப்-50' நட்சத்திரங்களை ஆண்டுதோறும் தேர்வு செய்கிறது. இந்திய விளையாட்டு வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பு, இளம் தலைமுறைக்கு அளித்த ஊக்கம், சொந்த சாதனைகள் மற்றும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையில், "நம்பர்-1' இடத்தை "சாதனை நாயகன்' சச்சின் தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி பெற்றார். மூன்றாவது இடம் விஜய் மல்லைய்யாவுக்கு கிடைத்தது. விரைவில் ஐ.சி.சி., தலைவராக உள்ள சரத் பவார், பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர், இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஆகியோர் முறையே நான்கு, ஐந்து, ஆறாவது இடத்தை பெற்றனர்.
சானியா "50':
பீஜிங் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அபினவ் பிந்த்ரா 41வது இடம் பெற்றார். சர்ச்சில் பிரதர்ஸ் கால்பந்து கிளப் அணியின் அலேமோ, டெம்போ ஸ்போர்ட்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாஸ் முறையே 48, 49வது இடத்தை பிடித்தனர். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 50வது இடத்தை பெற்றார். மும்பையில் நடந்த விழாவில் "டாப்-50' பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் முதலிடம் பெற்ற சச்சினுக்கு விருது தவிர, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்ததற்காக "தங்க பேட்' ஒன்றும் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.
இது குறித்து சச்சின் கூறுகையில்,""நாட்டுக்காக முழுமனதுடன் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். இரண்டு அல்லது மூன்று தலைமுறையாக விளையாடி வருகிறேன். சமீபத்தில் இரட்டை சதம் அடித்தது தொடர்பாக இன்னும் வாழ்த்துக்கள் குவிகின்றன. இதனை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது,''என்றார்.
இந்திய ஒலிம்பிக் வரலாற்றில், தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதலாவது இந்தியரான அபினவ் பிந்த்ரா கூறுகையில்,"" தங்கம் வெல்வதற்காக 16 ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த தருணம் மறக்க முடியாதது,'' என்றார்.
சானியா மிர்சா கூறுகையில்,""செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சியான விஷயம். காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன். இந்த ஆண்டு டில்லியில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக தயாராகி வருகிறேன்,'' என்றார்.






