வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ‘மெகா மோசடி’ : கேரள நபர்கள் கைது: 102 பாஸ்போர்ட்கள் பறிமுதல்
சென்னை : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பாஸ்போர்ட் மற்றும் பணம் பெற்று மோசடியில் ஈடபட்ட இரண்டு கேரள நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 102 பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் பாவித்ராஜ் மகாபத்ரா. இவர் தற்போது சென்னை, ஒட்டேரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பாவித்ராஜ் மகாபத்ரா ஓட்டேரி போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில்," எனக்கும் எனது நண்பர்களுக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டு நபர்கள் பாஸ்போர்ட் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர். இருவரும் சென்னையில் தங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து எனது பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பெற்று தர வேண்டும்,' என கூறியிருந்தார்.
புளியந்தோப்பு துணை கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் படி, ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பாவித்ராஜ் மகாபத்ரா மூலம் அவர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு இருவரின் நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் கண்கானித்து வந்தனர். இதில், பாவித்ராஜ் மகாபத்ராவை மோசடி செய்தது கேரளா மாநிலம், திரிச்சூர், ஆவானிசேரி அடுத்த பனிக்கரைசேரியை சேர்ந்த கோபாலன் என்பவரின் மகன் அணில்(45) மற்றும் பாலக்காடு, அத்திப்பள்ளத்தை சேர்ந்த யேசுதாஸ்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
போலீசார் தேடுவது தெரிந்ததும் மும்பை தப்பி செல்வதற்காக பெரம்பூர் ரயில்நிலையம் அருகே நின்றிருந்த அவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அணில் மும்பையில் வி.ஜி., கன்சல்டன்சி, அல்மாஷ் கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனங்களை முறைப்படி அனுமதி பெறாமல் நடத்தி வந்துள்ளது தெரியவந்தது. அந்த நிறுவனங்களின் மூலம் ஒரிசாவில், வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடத்தி பல மோசடி குற்றங்களில் அணில் ஈடுபட்டுள்ளார். அவரின் நிறுவனத்தில் மேலாளராக யேசுதாஸ் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அணில் மீது மும்பை, செம்பூர், பசந்த பார்க் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2004ம் ஆண்டு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரிசா மாநிலத்தில் வழங்கப்பட்ட 102 இந்திய பாஸ்போர்ட்டுகள், இரண்டு மொபைல் போன், 10 சிம்கார்டுகள், 6 ஏ.டி.எம்., கார்டுகள், பாடி எம்.டி.எச்., ரோடு என்ற விலாசமிட்டு கொடுக்கப்பட்ட டிரேடு சான்றிதழ்கள் மற்றும் மயிலாப்பூர் மருத்துவ பரிசோதனை செய்து கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின், இருவரும் கைது செய்யப்பட்டு, கோர்ட் உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






